Thursday, October 1, 2009

ஷேக்ஸ்பியர்



இறையருட் கவிமணி அவர்கள் தமிழில் எந்த அளவு புலமைப் பெற்று இருந்தார்களோ அதே அளவு ஆங்கிலம், மலையாளம், அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஷேக்ஸ்பியரின் வரிகளை அழகுத் தமிழில் அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் பாங்கு நம்மை மகிழ்விக்கும்.

“But man; proud man
Drest in a little brief authority
Most ignorant of what he is assured,
His glossy essence, like an angry ape;
Plays such fantastic tricks before High Heavens
As makes the angels weep”


- Shakespeare

“மானிடனே ! செருக்குற்ற மானிடனே உனக்காக
வானிடமே வாக்களித்த வாய்ப்புகளை உணராமல்,
அற்ப அதிகாரத்தால் ஆணவமே மிகப்பெற்று
வெறி கொண்ட மற்கடம் போல் வேடமிட்டுத் துள்ளுகிறாய்;
கோனிடமே விசித்திரமாய்ச் சூழ்ச்சிகளை யாடுகின்றாய்;
வானவரோ விளைவுணர்ந்து விம்மி விம்மி அழுகின்றார்”

- இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர்.

Friday, September 25, 2009

முத்தமிழ் வளர்ச்சியில் ..

கவிமணி பேரா . கா. அப்துல் கபூர் அவர்கள் தமிழக அரசின் பொற்கிழி விருது பெற்றவர் . இவரின் "மிக்க மேலானவன்" புத்தகம் இறைமறையின்

87ஆவது அத்தியாயத்தின் விளக்கவுரை போல் அமைந்ததாகும்." ஞானப்புகழ்ச்சி ஓர் ஆய்வு" எனும் புத்தகம் தக்கலை பீரப்பா அவர்களின் பாடலை இவர் ஆய்வு செய்து எழுதியது .

இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல், தீன்வழிச் செம்மல், நபிவழிச் செல்வர் , கன்சுல் உலூம் (அறிவுக் களங்சியம்) ஆகிய கெளரவங்களைப் பெற்ற பேராசிரியர் கா. அப்துல் கஃபூர் எம். ஏ.,டி.லிட் அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். ஒரு தமிழ்ப் பேராசிரியரால் கல்லூரி முதல்வராகவும் பன்மொழிப்புலவராகவும், பன்னூல் ஆசிரியராகவும் கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும், தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் அரைநூற்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்குத் 'தமிழ்ச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவரது தமிழ்ப்புலமைக்குச் சான்றாக அமையும் அவரது 'அரும் பூ ' என்னும் குழந்தைப்பாடல் நூலினை ஆய்வு செய்தோர், பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பட்டம் பெற்றுள்ளனர்.

'இனிக்கும் இறைமொழிகள்' என்னும் பெயரில் பேராசிரியர் அவர்கள் , திருக்குர் ஆன் வசனங்கள் சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ள ஆய்வுகள் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இவையன்றி, கற்கண்டு சொற்கொண்டு உரையாற்றி உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடல் கடந்த நாடுகளிலும் முத்திரை பதித்த மூத்த தமிழரிஞர். இறையருள் பொழியும் கவிதைக் கொண்டல். அரும்பு உள்ளங்களுக்கும் கவிமழை தந்த கரும்புக் கவிஞர் இவர். பைந்தமிழ் நாட்டில் பாட்டரங்குகள் தோன்றக் காரணமான முன்னோடி. வாடாத மாலை இலக்கியங்கள் பலவற்றை வண்ணத் தமிழில் இயற்றிச் சிறந்த காலத்தின் கண்ணாடி. உரைநடைத் தமிழில் உயிரூட்டப் பாணியை ஆக்கி அழகு தமிழுக்கோர் அப்துல் கஃபூர் ' எனப் பல்கழைக் கழகத் தமிழ்த் துறை தலமைப் பேராசிரியராலேயே பாரட்டப் பட்டவர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அதிராமப்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர். தமது இளவல் பேரா. முஹம்மது பாரூக் அவர்களின் உறுதுணையோடு "மதி நா " (அறிவும் நாவும்) என்ற இதழைப்பல்லாண்டுகளாக நடத்தியவர்.

பேராசிரியர். முஹம்மது பாரூக் அவர்கள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியர் மற்றும் சென்னை புதுக்கல்லூரியில் சிறப்புப் பேராசிரியர் .தமிழ் இலக்கியக் கூட்டங்கள் பலவற்றைத் தலைமையேற்று நடத்தியவர். தற்போதும் மலேசியா, சிங்கப்பூர் என ஒழிவின்றி, தமிழ் இலக்கிய மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தமிழ்த் தொண்டு செய்து வருபவர்.

நன்றி: நல்லடியார்/ எதிரொலி ஜூலை 2006

Thursday, September 24, 2009

ஆணிவேர்

இறையருட் கவிமணி – என்
இதயத்தின் ஒளிமணி !

சொல்லும் செயலும்
விரலும் ரேகையுமாய் விளங்கிய வித்தகர் !

நாக்குத் திரியில் மறைச்சுட ரேந்தி
தீனெறி காட்டிய மனித விளக்கு

பாதத்தை இவர்கள் நடத்திய முறையிலும்
‘இபாதத்தை’யே காண முடிந்தது !

எழுத்துக் களிலும் இறை வணக்கமே
இலங்கச் செய்த இறைமை ஞானி !

இவர்களின் எழுத்துக்கள் –
வெள்ளைத் தாள்களை ‘முஸல்லா’ வாக்கி
நேர்க் கோடுகளில் – தம்
தொழுகையின் ‘சப்’பை நிறுவிக் கொண்டவை !

இவர்களிம் வியப்புக் குறிகளில் –
இறக்கே செலுத்தும் ‘இஃதிதால்’ இருக்கும் !

இவர்களின் கேள்விக் குறிகளும் –
இறையொரு வனுக்கே ‘ருகுவு’ச் செய்வன !

வாய்மை என்னும்
வெண்டளைகளால் விரவப் பட்ட
இவர்களின் வெண்பா வாழ்வு
முற்றிலும் இறைக்கே ‘ஸுதாய்’ அமைந்தது !
ஏகத் துவமே இவர்கள் வாழ்வின்
‘கஃதா’ வானது !

இறையச் சத்தால் உதறும் இவர்களின்
எழுது கோலின் மைத்துளிகள்
என்னில் கூடக்
கவித் துவத்தைக் கருக்கொள்ள வைத்த
ஆன்மத் துளிகள் !

இவர்களின்
சந்த மகரத்தால் பூப்பெய்தி
காய்த்துக் குலுங்கும்
கிளுவைக் கனிகள் – என் கவிதைகள் !

‘தேமாங்கனி’ யாய்த் தெவிட்டா தினிக்கும்
நாமம் கொண்ட இந்த
அபூ ஸையிதின் குதிரைச் சாணமாய்
என்னை நானே ஆக்கிக் கொண்டதால்

அகிலும் கோங்கும் சந்தன வகைகளும்
வீற்றிருக் கின்ற
அறிஞர் நெஞ்ச அரியா சனங்கள்
எனக்கும் கூடச்
சரியா சனத்தைத் தந்திருக்கின்றன !

கழிவிலா மெய்ங்ஞானக் கற்பூரப் பெட்டகமாய்ப்
போற்றக் கிடைத்த புனிதகுரு ! – எனையும்
ஏற்றணைத்த தால்தான் இன்றுவரை நானிங்கே
செல்லரிக்கப் படாத சிறுநூலாய் இருக்கிறேன் !

சிந்தனை ஊற்றுக்கள் நெஞ்சில் உதித்தோடச்
செய்திடும் இவர்களின் எழுதுகோல்
மூஸாவின் கைத்தடியாய்க்
கண்முன்னே காட்சிதரும் !

அறிவுப் பசிப்பயண அன்பர்க ளெல்லாம்
சிறகடிக்கும் வெளவாலாய்ச் சேர்ந்து விருந்துண்ணும்
செஞ்சொற் கனிப்பொழில் இவர்கள் !
மடைக் கரும்பின் இந்த இனிய (அடிப்) பகுதியை
மண் அணைத்துக் கொண்டது.

மண்ணுக்குள் சென்றிருக்கும் இவர்கள் –
எங்கள் ஆணிவேராய் இருக்க்கின்றார்கள் !
நாங்கள் – இவர்களின்
கிளைகளும் விழுதுகளுமாய் இருந்துகொண் டிருக்கின்றோம் !

நில்லா உலகில்
நிற்கும் இவர்களின் சமாதி –
சொல்லேர் உழவர் இவர்கள்
சமுதாயப் பயிர்செழிக்கத்
தம்மைத் தாமே – ஓர்
எருமுட்டாய் விட்டுச் செல்லும் இடம் !

- கவிஞர் கஃபூர் தாசன்

Tuesday, April 21, 2009

திருமறை திறப்பு



அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோ ரிறையின் இனியபேர் போற்றி!
உலகெலாம் படைத்தே உயர்வுறக் காக்கும்
புலமையோன் தனக்கே புகழெலாம் உரிய!
அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோ ரிறையே! இனிய பேரிறையே!
முடுவுநாளதனின் முழுமுத லரசே!
அடியேம் யாமுன் னடியினைத் தொழுதேம்!
உன்பா லன்றோ உதவியை நாடுவேம்!
நன்னெறி மீதெமை நடத்துவா யாக!
நின்னருள் பொழிந்த நேயர்தம் நெறியில்;
நின்சினம் கொண்டோர், நெறிவிட் டகன்றோர்
செல்நெறி யன்றது செம்நெறி யன்றே!

Monday, February 16, 2009

எம்.எஸ். பசீர் அகமது D.F.A.

ஞானத் தமிழ் மகனே கண்ணுறங்கு !

கல்லூரி முதல்வராய் கனிமொழி பேசி
அதிரையில் ஆரம்பித்த அறிமுகம்
அழகுத் தமிழ் பழகு மொழிப் பெருமிதம்..
கோட்டும் சூட்டும் போட்டு –
வகுப்பறை மேடையில் நீ!
வாய்திறந்து கூறிடும் தமிழால்
குண்டூசி விழும் ஓசை கூட மிகத்
துல்லியமாய் கேட்டு விடும் !
மாணவர்களை மாண்புமிக்கவர்களாக நீ
மாற்றிய விதமோ அனைவருக்கும் பெருமை

இறைவன் உனக்களித்த அங்கீகாரம்
‘இறையருட் கவிமணி’ எனும் பட்டம்
அதிரை மக்கள் அளித்த அழகிய சிறப்பு ..

அடியேனின் நூல் –
தமிழக முஸ்லிம் திறமையாளர்கள்
இதற்கு நீ அளித்த ஒத்துழைப்பை
என் ஆவி இருக்கும் வரை..
இன் இதயம் மறக்காது உன் நினைவை,

பொறுமைக் கடல் நீ ..!
நூல்களுக்கு வழங்கிய மதிப்புரைகள்
உலக மாந்தர்களை நல்வழிப்படுத்தும் !
இறைவனின் வல்லமையை நீ
கடுமையான உழைப்பில் கண்டாய்
அதற்கு சாட்சி

‘மிக்க மேலானவன்’ எனும் அதிசய நூல் !
பெருமானார் (ஸல்) புகழ் பாடினாய் நீ..
உன் புகழ் மிக்க ‘நா’ த் திறத்தால்
தமிழகப் புனித கவியரங்குகளில் நீ
தலைப் ‘பா’ பாடியே அசத்தினாய்.

ஆயுத எழுத்தைப் போன்று அழகு முத்திரையை..
உன் நெற்றியில் பதித்துக் கொண்டாய்!
இறைவனைத் தொழுததே உன் நெற்றியில் தழும்பு..
இறைமறைக் கருத்தை உணர்த்துவதே உன் இயல்பு!

“அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என
முஸம்மில் குடிலில் இலக்கிய வளமாய்
ஞானச் சுடராய் வாழ்ந்தாய்..
நீ வாழ்ந்ததால் தக்கலைப் பெரு நகருக்குத்
தனித் தமிழ் பெருமை உண்டு!
ஆன்மீக இன்பம் காட்டும் உன் அகம்!
இன்னும் இருந்திருந்தால் நீ
இன்பத் தமிழ் ஞானமுது ஊட்டுவாய்
என்ன செய்வேன் நான் ..
இறைவன் நாட்டம் அப்படி!

கண்ணுறங்கு கண்ணுறங்கு ..
ஞானத் தமிழ்மகனே கண்ணுறங்கு!
இன்ஷா அல்லாஹ்.. நிச்சயம்
மறுமை நாளில் உனக்கொரு இடமுண்டு;
அதுதான் அழகிய சுவனப் பூங்கா ..
அல்லாஹ்வின் அருள்மிகு நேசருக்கு
அவன் வழங்கும் சிம்மாசனம் அதுதானே?

- எம்.எஸ். பசீர் அகமது D.F.A.
அடியக்கமங்கலம்

பள்ளிப் பண்

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாஃபீ கல்பீ கய்ருல்லாஹ்
நூரு முஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹா – ஹக்கு
லாயிலாஹா இல்லல்லாஹ்

இறைவா உனது கருணையினால்
.....இம்மை மறுமை பேறுகளைக்
குறையா தெமக்கு கொடுத்திடுவாய் !
.....கொடுமை யனைத்தும் தடுத்திருவாய்
நிறைவாயுள்ள நலன் ஈந்து
.....நெஞ்சம் மலரச் செய்திடுவாய் !
கறையாயுள்ள பகுதிகளைக்
.....கழுவித் தூய்மை யாக்கிடுவாய் !

பிறையாய்த் திகழும் எம்பள்ளி
.....பிறைபோல் வளர உதவிடுவாய் !
நிறைவாம் சீதக்காதி பெயர்
.....நின்றே நிலவும் நிறுவனத்தார்
நிறைவே கொள்ளத் துணைபுரிவாய்
.....நிலைபேறுடைய எம் கொள்கை
குறையா தோங்க அருள் புரிவாய் !
.....குறைகள் தீர்க்கும் கோமானே !

அறிவுக் கடலாம் கஸ்ஸாலி
.....அடையும் நெஞ்சின் விரிவைப்போல்
அறிவின் ஒளியாய் எம்நெஞ்சை
.....அழகாய் அமைப்பாய் அருளாளா !
செறியும் கல்வி எமக்கூட்டும்
.....சீரிய நேரிய ஆசிரியர்
அறியும் பெற்றோர் அனைவருக்கும்
.....அருளைப் பொழிவாய் ரஹ்மானே !

(இயற்றியவர் : பிறைப்பள்ளியின் நிறுவன முதல்வர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர், M.A. அவர்கள்)

Thursday, February 5, 2009

நீர் வீழ்ச்சி



"இதென்னடா இது?
அந்தப் பாறை முகடுகளில்
தண்ணீரைத் துவைத்துக்
காயப்போட்டது யார்?

* * *

இங்கென்ன
தண்ணீர் முத்துக் குளிக்கிறதா?

இது என்ன
வானுக்கும் பூமிக்கும்
வைர நெசவா?

அது என்ன
தற்கொலை புரியும் தண்ணீருக்கு
அத்தனை ஆனந்தமா?"

என்று நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகை தன் அபரிதமான கற்பனையில் அருமையாகச் சொல்லப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் வரிகளைப் படித்து ஆனந்தமடைந்தேன்.

"கவிதையிற் பேசிய காவலர்கள்" என்ற இறையருட் கவிமணியின் கட்டுரையில் இதுபோன்ற ஒரு அழகிய வருணனையை நாம் காணலாம். முகலாயக் கவிப்பேரரசி ஜெய்புன்னிஸாவின் கவிதை ஒன்றை இறையருட் கவிமணி அவர்கள் இவ்வாறு மொழி பெயர்க்கின்றார் :

" நீர் வீழ்ச்சியே!
யாருக்காக நீ கவல்கிறாய்?
யாருக்காக நீ தலையைத்
தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிறாய்?
என்னைப் போல் இரவனைத்தும்
தலையைப் பாறைகளில்
முட்டி மோதிக் கொண்டு
அழுவதற்குக் காரணமான
உன் துயர்தான் யாது?"

அற்புதமான இக் கற்பனை நம்மை பரவசப்படுத்துகிறது அல்லவா?

இவரது மாணவர்களில் சிலர்

பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் மாணவர்களாய்த் திகழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்கள்:

1. கவிஞர் 'சிற்பி' பாலசுரமணியன் - சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர், கோவை பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவாராக பணீயாற்றி ஓய்வு பெற்றவர்.

2. கலைமாமணி மணவை முஸ்தபா - யுனெஸ்கோ கூரியர் ஆசிரியர்

3. திரு. சாதிக் பாட்சா - திராவிடக் கழக முன்னோடிகளில் ஒருவர், முன்னாள் தமிழக அமைச்சர்

4. பேராசிரியர் எம்.ஏ.அப்துல் காதர் - அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வரும், இந்நாள் தமிழ்த்துறை தலைவருமாக இருப்பவர்

5. திரு. நடராசன் - உச்ச நீதி மன்ற குற்றவியல் வழக்கறிஞர்

6. திரு. மு. கண்ணன் - சென்னை விமான நிலைய முன்னாள் துணை கலெக்டர்

7. பேராசிரியர் இரத்தின நடராசன் - ஐ.ஆர்.எஸ். பள்ளிசாரா மாணவர் கல்விக் கருவூல இயக்குனராய்ப் பணியாற்றியவர்

மூன்றாம் முஸ்லிம் தமிழ்ப் பேராசிரியர்

கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளதாக இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி முன்னாள் முதல்வரும், தமிழறிஞருமாகிய கேப்டன் அமீர் அலி குறிப்பிடுகிறார்.

"திருச்சி கிறித்துவக் கல்லூரி ஒன்றில் புலவர் பிச்சை இபுறாகீம் பணியாற்றினார். அவர்தான் முதல் முஸ்லிம் தமிழ்ப் பேராசிரியர். இரண்டாவதாக, அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பணீயாற்றினார் பேராசிரியர் அப்துல் காதர். மூன்றாவதாக, இறையருட் கவிமணி".

[தகவல் : முனைவர் ஹ.மு.நத்தர்சா]

அதிரையில் கல்விப் பணி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதர் முஹ்யத்தீன் கல்லூரியில் 1962 முதல் 1967 வரை தமிழ்த் துறைத் தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார் கா. அப்துல் கபூர்.

அவர் முதல்வராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்த திரு. நெ.து. சுந்தரவடிவேலு பங்கேற்றார். முதல்வரின் வரவேற்புரையால் கவரப்பட்ட நெ.து.சுந்தர வடிவேலு அவர்கள் தான் ஆற்றிய உரையில்,

"நான் எத்தனையோ அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். இன்று உங்கள் முதல்வர் நிகழ்த்திய சொற்பொழிவைப் போன்று வேறெங்கும் கேட்டதில்லை. மனம்விட்டுச் சொல்கிறேன். சிறிது கூட தடையில்லாமல் சரளமாகவும் வேகமாகவும் எப்படி அவரால் பேச முடிகிறது என்று வியந்து போனேன். தமிழ் பேச்சாளர்களில் உங்கள் முதல்வரின் பேச்சு தனிப்பாணி; அவரது மொழியழகும் சொல்லழகும் நடையழகும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன " என்று புகழ்ந்துரைத்தார்.

[ஹ.மு.நத்தர்சா எழுதி சாகித்திய அகாதெமி வெளியிட்ட "இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்" என்ற நூலிலிருந்து]

Sunday, February 1, 2009

புதுக்கல்லூரி

கலையாட்சி செய்கின்ற
கவினாறும் சென்னையிலே
உடலின் கண் விழியைப்போல்
உடையிடையே பாகைப்போல்
கடலின் கண் முத்தைப்போல்
கவின் பொய்கைத் தாமரைப்போல்
நகர் நடுவன் தலைநிமிர்ந்து
நல்லறிவு மாமலையாய்
திகழ்கின்ற கல்லூரி...
(சென்னை புதுக்கல்லூரியைப் புகழ்ந்து இறையருட் கவிமணி அவர்கள் கவியரங்கத்தில் பாடியக் கவிதை)

பேராசிரியரின் கல்விப் பணி

1946 - 1947
பேராசிரியர், தமிழ்த்துறை,
முஸ்லிம் அரசினர் கல்லூரி, சென்னை

1947 - 1952
தமிழ்த்துறைத் தலைவர்,
இஸ்லாமியக் கல்லூரி, வாணியம்பாடி

1952 - 1956
கீழ்த்திசை மொழித்துறைத்தலைவர்,
ஜமால் முகம்மது கல்லூரி, திருச்சி

1956 - 1962
தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர்,
ஹாஜி கருத்த இராவுத்தர் கெளதிய்யா கல்லூரி, உத்தம பாளையம்

1962 - 1967
தமிழ்த்துறைத் தலைவர், கல்லூரி முதல்வர்,
காதிர் முஹ்யத்தீன் கல்லூரி, அதிராம்பட்டினம்

1967 - 1974
முதல்வர்,
பிறைப் பள்ளி, வண்டலூர், சென்னை

1976 - 1980
நிர்வாக அதிகாரி,
அல்-அமீன் உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம்

நிர்வாக அதிகாரி,
திராவிட மொழி இயல் நிறுவனம், திருவனந்தபுரம்

வகித்த பிற பொறுப்புகள்:
  1. தமிழ்ப் புலவர்க்குழு உறுப்பினர்
  2. மதுரை, தஞ்சை மாவட்ட இலக்கிய ஆட்சிக்குழு உறுப்பினர்
  3. திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைகுழு உறுப்பினர்
  4. சென்னை பல்கலைக்கழக பாடநூல் உறுப்பினர்

Friday, January 30, 2009

எண்ணமே வாழ்வு

கவிமணி அவர்களின் 'அரும்பூ' நூலில்

"அழியா தென்றும் வண்மை
அயரா தென்றும் திண்மை
எழிலைச் சேர்ப்பது பெண்மை
என்றும் சொல்நீ உண்மை"

"வில்லிற்குரியது அம்பு
வீணாம் ஆசை அம்பு
இல்லிற்குரியது செம்பு
எண்ணம் வாழ்வென நம்பு"

'அயராதென்றும் திண்மை' சந்தக் கவியில் 'எண்ணம் வாழ்வென நம்பு' எனும் தொடர்கள்

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"

என்ற குறளுக்குக் குரல் கொடுப்பவையாக உள்ளன.

- பேராசிரியர், ஏரல் ஜே.அஷ்ரப் அலி
பொருளியல் துறை, வக்பு வாரியக் கல்லூரி, மதுரை

பூவின்மேல் கல்

நாயகத்தின் பொறுமை யுள்ளத்திற்கும், கருணை யுணர்வுக்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது - தாயிப் நகரத்தில் நடந்த நிகழ்ச்சி !

தாயிப் நகர மக்களிடம் ஓரிறைக் கொள்கையை நபிகள் நாயகம் உணர்த்த முயன்றபோது அங்கிருந்த செல்வாக்கு மிக்க மனிதர்கள் நபிகள் நாயகத்தைப் பார்த்துக் கேலியும் கிண்டலுமாகப் பின்வரும் மொழிகளை மொழிந்தார்கள்:

"நீர் இறைவனின் தூதரென்றால்உம்முன் நிற்கும் தகுதி எமக்கில்லைநீர் இறைவனின் தூதர் இல்லையென்றால்எம்முன் நிற்கும் தகுதி உமக்கில்லை"

குத்தீட்டிச் சொற்களால் நாயக உள்ளத்தைக் குத்தில் காயப்படுத்தியும் திருப்தியடையாத அக்கொடியவர்கள் கண்ஜாடை காட்டி நாயகத் திருமேனி மீது கல்லெறிய தாயிப் நகர மக்களுக்குக் கட்டளை யிட்டார்கள்.

கல்லடிபட்டுப் பூவினும் மெல்லிய நாயகத் திருமேனி புண்பட்டுப் பூமியில் இரத்தம் கசிந்து நின்ற அக்காட்சியை இதயம் பதற "இசைமுரசு" நாகூர் ஈ.எம்.ஹனிபா "தாயிப் நகரத்து வீதியிலே..." எனச் சோகக் குரலெடுத்துப் பாடியுள்ள உருக்கமான பாட்டைக் கேட்டு உள்ளம் கசியாதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்?

கவிஞர் மு.மேத்தா மனம் பதைபதைக்கத் தாயிப் நகரக் கொடுமையை இப்படிக் குறிப்பிடுகிறார் :

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்"

'கவிக்கோ' அப்துர் ரகுமான் தன் கவிமொழியில் சற்று வித்தியாசமாக இதைச் சித்தரித்துக் காட்டினார் :

"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்"

இத்தகைய மோசமான சூழலிலும் தாயிப் நகர மக்களிடம் கருணை யுள்ளத்துடன் நபிகள் நாயகம் நடந்துக் கொண்ட காட்சியை,

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே"

எனச் சித்தரித்துக் காடுகிறார், இறையருட் கவிமணி.

- பேராசிரியர், முனைவர் ஹ.மு.நத்தர்சா,
தமிழ்த்துறை, புதுக் கல்லூரி, சென்னை - 14

கேக்



ஒரு சிறிய ஊரில் தேநீர்க்கடை இருந்தது. அக்கடையிலிருந்து காகம் ஒன்று "கேக்"கை எடுத்தது. பக்கத்தில் இருந்த மரத்தின் மீது உட்கார்ந்தது. மரத்தின் அடியில் இருந்த ஒரு கொக்கு காகத்திடம் கேக்கைக் கேட்டது. காகம் "இல்லை" என்று கூறுவதற்கு வாயைத் திறந்தது. கேக் கீழே விழுந்தது. கொக்கு அதனை எடுத்துக்கொண்டு காகத்தைப் பார்த்து கேலி செய்தது.
குழந்தைகளுக்கு கிளுகிளுப்பூட்டும் இக்கற்பனைக் கதையை நாலே வரிகளில் நறுக்குத் தெறித்தாற்போல் நற்றமிழ் சுவை மணக்க நயம்பட இறையருட் கவிமணி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் :
காக்கை கேக்கைக் கோக்க
கொக்கு கேக்கைக் கேக்க
காக்கை கேக் கைக் கக்க
கொக்கு கெக்கெக் கெக்கே !
('அரும் பூ' நூலிலிருந்து)

உயர்ந்தோர் தாழ்ந்தோர்



"உன்னை விடவும் பொருள் நிலையில்
உயர்ந்தோர் தம்மைக் கண்டுவிடின்
உன்னை விடவும் தாழ்ந்தோரை
உன்னுக என்பது நபிமொழியாம்"

-இறையருட் கவிமணி

கிரிதாரி பிரசாத்

"அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேராசிரியர் அவர்கள் தன்னுடைய ஆழமான கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்."

- ஆன்மீகச் சொற்பொழிவாளர் திரு. கிரிதாரி பிரசாத்
(1951-ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை பிரோவா தியேட்டரில் நிகழ்த்திய பேருரையிலிருந்து)

முல்லை சக்தி

"இன்சொல் வல்லார்; தெவிட்டாத சொற்பெருக்காற்றும் ஆற்றாளர்; பேரறிஞர் அண்ணா அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ள பண்பாளர் - ஜனாப் அப்துல் கபூர் அவர்கள்"

- முல்லை சக்தி
(வட ஆற்காடு மாவட்ட திராவிட இயக்க முன்னோடியாய்த் திகழ்ந்த பிரமுகர்.)

காண்டாவும் போண்டாவும்



திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்கு சுற்றத்தாருடன் சென்றபோது தன் அருமை மகள் பானு காண்டா மிருகத்தைக் காண நேர்ந்தது. கையிலிருந்த போண்டாவை அதன் வாயில் வீசி எறிய அக்காட்சியைக் கண்ட கவிஞருக்கு பாடலொன்று பிறக்கிறது.

காண்டா ஒன்றைக் கண்டவுடன்
.....கருத்துடனே பானுவும்
போண்டா ஒன்றைப் போட்டனள்
.....பொங்கிப் பொங்கிச் சிரித்தனள் .

இப்பாடல் 'அரும்பூ' வில் இடம் பெற்றது.

தகவல் : திருவை அப்துர் ரஹ்மான்

தமிழ்ப் புலமை



இறையருட் கவிமணி அவர்கள் சென்னை, வாணியம்பாடி, திருச்சி, உத்தமபாளையம், அதிராம்பட்டினம் முதலான ஊர்களில் தமிழ்த்தொண்டாற்றிய பேராசிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். 1973-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த மீலாது விழா கவியரங்கத்தை தலைமையேற்று நடத்தியபோது, இச்செய்திகள் அனைத்தையும் ஒரே வரியில் அடக்கிய அவரது தனித்திறன் நிறைந்த தமிழ்ப் புலமையைப் பாருங்கள்.

"பாடியதில் நடுநகரில் பாளையத்தில் பட்டினத்தில்
பாடிவிட்டுப் பட்டிருக்கும் பறவையெனை அழைத்துவந்தே
பாட்டரங்கில் மாட்டிவிட்டீர்
பாப்புனையத் தூண்டிவிட்டீர்"

பாடி = வாணியம்பாடி - இசுலாமியக் கல்லூரி
நடுநகர் = திருச்சி - ஜமால் முகம்மது கல்லூரி
பாளையம் - உத்தமபாளையம் - ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி
பட்டினம் = அதிராம்பட்டினம் - காதிர் முகைதீன் கல்லூரி

பூச்செண்டு

தமிழின் இலக்கியம் பூச்செண்டு
தனியாய் அதற்கொரு மணமுண்டு
தமிழின் தீந்தேன் விருந்துண்டு
தழைக்கும் நாமோ மலர்வண்டு !

சமண பெளத்த வைணவமும்
சைவ இஸ்லாம் கிறிஸ்துவமும்
கமழும் நூல்கள் இந்நாட்டின்
கவினார் பண்பின் களஞ்சியமாம்

- இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்
(அரும் பூ நூலிலிருந்து)

ஏ.வி.எம். நஸீமுத்தீன்

தூமணிப் பாவலன், திருவிதாங் கோட்டு
மாமகன், தமிழ்ச்சுவை மாந்திட வைத்தவன் !
நாமகன் பன்மொழி நாவில் வளைத்தவன் !
கோமகன் அப்துல் கபூர்உயிர் நீத்தனன் !

பாவளம் செழித்த 'பதினென் மாலை'கள்
ஆவணம் என்றே அளித்த பாவலன் !
பூமணங் கமழும் 'அரும்பூ' தொடுத்தவன் !
நாமணங் கொண்ட நற்றமிழ் வித்தகன் !

'மனைவிளக்' கொளியில் 'மனவிளக்' கேற்றினான் !
தனிமொழித் திறத்தால் 'இறைமொழி' பாடினான் !
நினைவெலாம் இனித்திட 'நபிமொழி' நல்கினான் !
மனம்மொழி மெய்யெலாம் மதுரமே தூவினான் !

பல்லுயர் சிறப்பெலாம் படைத்த வல்லுநன்
கல்வியின் பணியிலே கரைந்த விற்பனன் !
மெல்லிசை பாடல்கள் வடித்த அற்புதன் !
பல்பொருள் விரித்த 'மதிநா' நாயகன் !

நேயனாம் அருட்கவி அப்துல் கபூரெனும்
தூயவன் வாழ்க்கை தமிழின் சாசனம் !
போயவன் படைப்பெலாம் பரவச் செய்திட
யாமிவண் ஆற்றுவம்.. கவிமணி வாழ்ந்திட !

அரும்பூ வந்தது

குழந்தை இலக்கியம் படைப்பது எல்லோராலும் இயலாத காரியம். குழந்தைகளோடு பழகி அவர்கள் மனதை நன்கு புரிந்துக் கொண்ட ஒருவரால்தான் அது இயலும் கவிமணி (1876), மகாகவி பாரதி (1882), பாவேந்தர் பாரதிதாசன், அழ.வள்ளியப்பா இவர்களின் வரிசையில் இறையருட் கவிமணி அவர்கள் நீங்காத இடத்தைப் பெற்று விட்டனர். 1989-ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்த "அரும்பூ" ஒரு சரித்திரம் படைத்தது. இப்படைப்பை பாராட்டுகிறார் ஒரு கவிஞர்,

கரும்புக் காட்டை கவியாக்கிக்
.....காதிற் குள்ளே ஊற்றியவர்
சுருங்கிப் போன மானிடரைச்
.....சொற்பொழி வாலே நிமிர்த்தியவர்
விருந்து படைத்து வெகுநாட்கள்
.....விலகிச் சென்றன எனும்போதில்
அரும்பூ மலரைக் கண்டேனே
.....அதிக இன்பம் கொண்டேனே

படிக்க எடுத்தேன் வெடுக்கென்று
.....பற்றிக் கொண்டார் வீட்டினுள்ளோர்
முடித்தார் ஒருவர் பின்னாக
.....முடிக்கப் பொறுக்க மாட்டாமல்
படிக்க முனைந்தார் அனைவருமே
.....பழுத்த குலையில் ஈக்கள்போல்
தொடுத்த அரும்பூ அத்தனையும்
.....சுவைத்'தேன்' சுவைத்'தேன்' என்றாரே

படிக்கட் டாகும் அறிவுரையா
.....பழக்குலை தோற்கும் கனிவுரையா
வெடிக்கும் புதிரா விளையாட்டா
.....விழுந்து விழுந்து சிரிக்கட்டா
தொடுக்கும் கணக்கா ரயில்வண்டித்
.....தொடரில் உலகைச் சுற்றுவதா
நொடிக்குள் எல்லாம் இயலுவதே
.....நுழைந்தால் போதும் அரும்பூவில்

- தமிழ்மாமணி, புலவர் அ.அஹ்மது பஷீர் M.A.,M.Ed.,

Wednesday, January 28, 2009

வார்த்தைச் சித்தர்

செந்தமிழ் வார்த்தைகளைக் கொண்டு சொற்சிலம்பு ஆடுவதில் அவருக்கு நிகர் அவரே. சந்தம் கமழும் சந்தன வரிகள் அவைகள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன் சொட்டும் மொழிகள்.

நாயகத் திருமேனியை நபிமணி மாலையில் வருணிப்பதைப் பாருங்கள் :

“தத்தித் தாதி துதைத்த நபி
தத்தை துதித்த தூதுநபி
தித்தித் தாதி ததைத்த நபி
தித்தித் தோதி துதித்த நபி”

எடுத்துக் காட்டாக இதோ ஒரு ஓவியக் கவிதை :

“நன்னபி மன்னபி முன்னுநபி
நந்நபி மென்னபி மின்னுநபி
இன்னபி பொன்னபி யென்னுநபி
இதயங் குளிர உன்னுநபி”

இன்னுமொரு வார்த்தை ஜால வரிகள் :

“மண்ணும் விண்ணும் எண்ணுநபி
மண்ணி லெண்ணும் திண்ணநபி
கண்ணும் எண்ணும் பண்ணுநபி
கண்ணி லிண்ணும் வண்ணநபி”

ஆவி பிரியும் வேளையில்

எண்ணமே வாழ்வு என்பார்கள். இறையருட் கவிமணி இயற்றிய “துஆ நூறு” என்ற கவிதைகள் மிகவும் உருக்கமானவை.

“ஆவி பிரியும் அந்த வேளையில்
நாவினால் கலிமா நவின்றிடச் செய்வாய் !
நாயனே உன்றன் நல்லடியார்களுள்
நேயமாய் எனக்கு நல்லிடம் அளிப்பாய்”

என்ற வரிகள் மனதை நெகிழச் செய்யும்.

11.01.2002 வெள்ளி மாலை 'அஸர்' தொழுகைக்காக ‘ஒளு’ எடுத்த சற்று நேரத்தில் கலிமா மொழிந்தவாறு அவர்கள் ஆவி பிரிந்ததை அந்த நேரத்தில் அவர்கள் அருகே நின்று கொண்டிருந்த ஆறு பேரும் அந்த காட்சியைக் கண்டார்கள்.

திருமலர் மீரான்

1977 – நவம்பரில் திருவிதாங்கோட்டில் ‘எல்லாம் எழுத்துக்கள்’என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்திற்கு இறையருட் கவிமணி அவர்கள் தலைமை வகித்தார்கள். “ஈ” என்னும் தலைப்பில் திருமலர் எம்.எம்.மீரான் கவிதை பாடினார். ஈயாத புல்லர்களையும், ஈஈ என இளித்து வாழும் இளிச்சவாயர்களையும், சீதனத்திற்காக ஈஈ என இரக்கும் இதயம் இரும்பாகிப்போன இளைஞர்களையும் பிடித்து கடுமையாகச் சாடினார்.

அக்கணம் இறையருட் கவிமணி அவர்கள் பாடிய வரிகள் இவை :

“எழுச்சிக் கவிஞர் எம் எம் மீறான் ஈன்றார்
ஈயடிச்சான் காப்பி யில்லாத கவிதைகளை !
ஈமானில்லாது ஈயாது இருகை யேந்தும்
இளிச்ச வாய்ச் சீமான்களை சீறும் கவிதையிது”

ஆலிம் கவிஞர்

நிறையருளைப் பெற்றவரும் நெஞ்சினிக்க
நிறைகவிதை தருவோரும் நாமெல்லோரும்
இறையருட்பா மணியென்றே போற்றத்தக்க
இயல்பான கவியாற்றல் பெற்ற செல்வ !

- ஆலிம் கவிஞர் அல்ஹாஜ் ஜி.எம்.சதக்கத்துல்லாஹ் சிராஜ் பாகவி

Wednesday, January 21, 2009

புலவர் ஹெச். முஸ்தபா

நிறைபொருட் கவியணி நெஞ்சர்
இறையருட் கவிமணி என்பார்
மறைந்தனர் புவிதனில் என்றார்
நிறைந்தனர் உளமெலாம் என்பேன்!

இறைமறை நபியறம் என்றே
முறையுற மொழிந்தனர் நன்றே
துறைதனில் தமிழ்ப்புலம் கண்டே
உறைந்தனர் புகழ்த்தலம் கொண்டே!

மறப்பற நினைநினை வூட்டிச்
சிறப்புற உரை, கவி நாட்டி
இறப்பெனும் கட்டளை ஏற்றார்
திறத்தினின் அடியாராய் ஏற்பாய்!

உறைவிடம் வழங்கநீ யல்லால்
முறையிடப் பிறஇடம் உண்டோ?
இறைஞ்சினோம் அடிமைகள் உன்பால்
குறையெலாம் பொறுத்தருள் அல்லாஹ்

(ஆமீன்)

- புலவர் ஹெச்.முஸ்தபா, M.A.,M.A.,B.Ed.,

என்ன வேண்டும்?

பட்டுறையில் பொதிந்தெடுத்துப் பக்தியுடன் போற்றும்
பண்பார்ந்த மறையுரகள் நெஞ்சேற வேண்டும்
பட்டங்கள் துணைகொண்டு பாமரரை ஏய்த்துப்
பாழாக்கும் எண்ணங்கள் பஞ்சாக வேண்டும்!

கண்மூடிச் செயலெல்லாம் மண்மூடிப் போகக்
கற்றறிந்தோர் முன்வந்து கருத்துரைத்தல் வேண்டும்!
எண்டிசையும் புகழ்கொண்டே வாழ
எஃகுள்ளம் உருவாக்கும் ஏந்திழைகள் வேண்டும்!

(மனை விளக்கு நூலில் இறையருட் கவிமணி)

"திருமலர்"

நாயக மாலை!
பூலோக இருட்டை
மாய்த்து மறைத்து
முதலில் எழுந்த
முதல்வனின் தூதொளி
சிந்திய கதிர்களை
அனுபவித் தறிந்த
மகிழ்ச்சிக் களிப்பில்
கவி நெஞ்சில் மலர்ந்த
பனி நீர்ப் பூக்கள்!

உம்மத்துக்களின்
உயிர் மீட்சிக்காக
உலகாள்பவனிடம்
மன்றாடுகின்ற
இறுதித் தூதருக்கு
இறையருள் கவிமணி
வாசித்தளித்த
வாழ்த்துப்பா மடல்!

ஆழ அகல இசைச்
சொற்பொருள் நிறை
நய அணி சுவைத்
தேன் ததும்பும்
தீன் பாக்குடம்!

நேச நபியை
நெருங்கிக் காதலித்த
நித்யக் கவிஞரின்
சத்திய ஈரடிகளின்
ஈரம் நிறைந்த
இதய அணிவகுப்பு!

இறையருள் கவியின்
ஆழ்மன அடிநாத
'நாயகமே!' விளியின்
ஒலியதிர்வு அணுக்களின்
கூட்டுத் தொகையில்
எழுந்த எழுத்தக்களின்
கவிச் சொல் வடிவங்கள்!

உலகம் உள்ளவரை
நபிநேசர் உள்ளவரை
ஆன்மீக மணம்
வீசிச் சிறக்கும்
அருள் வாடா மாலை!
நாயக மாலை!
நாவும் அகமும்
இனிக்கும் மாலை!!
மணக்கும் மாலை!!!

Tuesday, January 20, 2009

அருள் புரிவாய்!

ஈமான் உறுதி வன்மையுற
இம்மை மறுமை செம்மையுற
தேமாங் கலிமா இறுதியிலே
தெவிட்டா துரைத்து நன்மைபெற

பூமா மணமே மண்ணறையில்
பொலிய உயிரும் நன்மையுறக்
கோமா னுன்னை வேண்டுகின்றோம்
குறையா தமக்குக் கொடுத்திடுவாய்!

- இறையருட் கவிமணி

கவிஞர் தா. காசீம்

பிறைப்பள்ளிப் பேரரசே! - இந்தப்
பேரரங்கின் கவியரசே!
உரைக்கின்ற கவிகேட்டு
"உரைக்" கின்ற பொறுப்பேற்றீர்!
பேராசி தந்ததென்னைப்
பணித்தமைக்குப் பணிவன்பின்
நன்றி சொல்வேன்

- சமுதாயக் கவிஞர் தா. காசீம்

நீதிபதி மு.மு.இஸ்மாயீல்



பல அருமையான நூல்களை எழுதியுள்ள இறையருட் கவிமணி அவர்களின் சேவை பாராட்டிற்குரியது. இத்தனை நூலகளை ஒருவர் எழுதியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. மனம் சுத்தமாக இருந்தால்தான் நம்மை அறியாமலே சொற்கள் வந்து விழும். அந்த மாதிரிச் சொற்கள் அமைந்த கவிதைகள் இங்கு நிறைய இருக்கின்றன.

அப்பேர்ப்பட்ட ஒரு கவிஞருக்கு - புலவருக்கு - மார்க்க மேதைக்கு இப்பரிசை வழங்குவதில் யாருக்கும் சற்றேனும் வேறுபட்ட கருத்து இருக்க முடியாது. அவர்களுக்குத் தகுந்த, அவர்களது செயலுக்கும் சேவைக்கும் அங்கீகாரம் அளிக்கின்ற முறையில், இந்தப் பரிசினை நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். இந்த வாய்ப்பு நமக்கு கிடைத்ததற்கு ஆண்டவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

(21.06.1999 ஆம் ஆண்டு சென்னை சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வுப் பண்பாட்டு நிலையத்தின் 1999-ஆம் ஆண்டுக்குரிய 'செய்கு சதக்கத்துல்லலாஹ் இலக்கியப் பரிசு' இறையருட் கவிமணி அவர்களுக்கு வழங்கப்பட்டபோது விழாத்தலைவர் மாண்புமிகு நீதிபதி மு.மு.இஸ்மாயில் அவர்கள் பரிசு வழங்கி ஆற்றிய உரையிலிருந்து)

அபிவை ஜின்னா

பொதிகை மலைச் சாரலிலே
புகுந்து வரும் தமிழ்க் காற்று!
அதிமதுரச் சொற் சிலம்பில்
அகங்குளிரும் அமுத ஊற்று!
புதினச் சொல் புகுந்து வரும்
புதுமைகளின் பூங்காற்று - இது
மதுரகவி கபூரண்ணா
மணித்தமிழின் பூச்செண்டு!

தேன்சிந்தும் எழுத்தாற்றல் - இவரின் ஏற்றம்!
தெய்வீக அருள் சுரக்கும் - இவரின் ஞானம்!
காணுகின்ற காட்சிகளைக் கவியில் காட்டும்!
கருத்தழகு கபூர் மாட்சி - கவிச்சொல்லாட்சி!
வான்சிந்தும் திருமறையில் - வாழ்வைக் காணும்
வற்றாத பேரன்பு - வாஞ்சை மிகு நற்பண்பு!
திருவிதாங்கோடு பெற்ற - தீன் தமிழ்க்கவிஞர் இவர்!
மருவிலா வாழ்வு கண்ட - மாணிக்க மனிதரிவர்!
அப்துல் கபூர் எனும் - அற்புத ஆசான் இவர்!
ஒப்பிலா உயர்வு கண்ட - உன்னத அறிஞர் இவர்!
அப்பப்பா! இவர் மறையின் - ஆதங்கம் அணையவில்லை இவரை
அல்லாஹ் சுவனத்தில் - அகங்குளிர அமர்த்திடுவான்!
அதுவே நம் பிரார்த்தனை - அல்லாஹ்விடம் வேண்டிடுவோம்!!

Monday, January 19, 2009

ஹ,நசீருத்தீன்

இறையருட் கவிமணி
நிறை வாழ்வு
வாழ்ந்தவர்.

அஞ்சுவன்னச்
சோலையில்
கொஞ்சும்
தமிழ்க்கிளி.

கவிதைகளை
கருக்கொண்ட
கார்மேகம்.

மழையாய்ப்
பொழியும்
சொல்லாற்றல்.

அமுதச் சுவைகாட்டும்
அற்புதக்
கவியாற்றல்.

பூமான் நபிமீது
புகழ்ப்பா பொழிந்த
பொன்கரத்துப்
புதையல்!

பளிங்கைப் போல்
எளிய நெஞ்சகம்.
முத்தமிழில்
வித்தை காட்டியவர்.

எளிய தமிழுக்கு
வித்து ஊன்றியவர்.

அறியாமைக்கு எதிரான
குத்தீட்டி
உயர்ந்த
சுவனத்துச் சோலையில்
கொள்கைப் பறவையாய்ச்
சிறகு விரிக்க
என் துஆக்கள்!

ஹ. நசீருத்தீன்
திருவிதாங்கோடு

கவிஞர் மு.மேத்தா



இறையருட் கவிமணி! இலக்கிய மாமணி!
அப்துல் கபூரை அறியார் எவருளர்?
கம்பீரமான கவிதைக் குயில் அது!
களங்கமில் லாத பெளர்ணமி நிலவது!
வண்ணத் தமிழ்ப் பயிர் வளர்த்த வயலது!
செருநர் நடுங்கிய செந்தமிழ்ப் புயலது!
தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதிபோல்
உருவமும் உள்ளம்போல் ஓங்கி உயர்ந்தது!
இதயங் கவரும் எழுத்தாளர் அவர்!
பேராற்றல் பெற்ற பேச்சாளர் அவர்!
அன்னைத் தமிழுக்கும் ஆண்டவன் பணிக்கும்
தன்னை அர்ப்பணித்த தமிழ்ப்பே ராசான்!
திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!!

கவிஞர் சாது

ஓரிறைத் தத்துவ உணர்வுகளை
ஓதிய திருமறைக் கொள்கைகளை
பேரிறைத் தூதரின் போதனையைப்
புரிந்திடச் செய்த கவிமணியே!

இலக்கிய உலகின் மேம்பாட்டை
இஸ்லாம் தந்த வழிபாட்டை
உலகம் போற்றும் நெறிகளிலே
உறுதி யாக்கிக் காட்டியவர்!

மோனை எதுகை மோதிவரும்
முத்தமிழ் மொழியின் பல்சுவையும்
தானே படித்துத் தெளிகின்ற
தமிழாய்ச் செதுக்கித் தந்தவரே!

எழுத்தும் பேச்சும் மணம்வீசும்!
எல்லோர் நாவும் புகழ்பாடும்!
அழுத்தம் நிறைந்த தன்மான
ஆற்றல் ஞானம் பெற்றவரே!

திருவை மண்ணின் புகழுக்குத்
தேன்தமிழ் அப்துல் கபூரவரின்
பெருமை மிக்க பிறப்பென்றும்
பேசப் படுமே சிறப்போடு!

உலகம் காக்கும் பேரிறையே
உயர்கவி யாத்த கவிமணியின்
நலமார் மறுமை வாழ்வுக்கு
நற்றுணை புரிந்திடு அல்லாஹூ!

Monday, January 12, 2009

சாகித்திய அகாதெமி நூல்



புது தில்லி சாகித்திய அகாதெமி, தமிழ் மொழியில் "இந்திய இலக்கியச் சிற்பிகள்" என்ற நூல் வரிசையில் சிறந்த தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய ஆய்வு நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

காலத்தால் மறையாத சிறந்த இலக்கியவாதிகளை அடையாளம் கண்டு அவர்களின் பெருமையை தமிழ்க் கூறும் நல்லுலகம் அறிந்துக் கொள்ளும் வகையில் அச்சிட்டு வரும் இவர்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது.
"கா.அப்துல் கபூர்" என்ற பெயரில் இறையருட் கவிமணியைப் பற்றி பேராசிரியர் ஹ.மு.நத்தர்சா அவர்கள் வெளியிட்டுள்ள நூல் எல்லோரும் படித்து பயன்பெறத்தக்க அருமையான தகவல் பெட்டகம்.

கபூர் சாகிப் அவர்களின் அனைத்து படைப்புகளையும் துருவித் துருவி ஆராய்ந்து மிகச் சிறப்பான முறையில் அவரது மாண்புகளையும், இலக்கியத் திறமைகளையும் திறம்பட படம் பிடித்துக் காட்டியுள்ளார். 'இறையருட் கவிமணி'யின் வாழ்வும், பணியும், அவரது உரைநடை மற்றும் சிறுவர் இலக்கியம், அவரது கவிதையில் காணப்படும் கவிதை வளம், அவரது பன்முக ஆளுமை இவையனைத்தையும் ஒன்று விடாமல் அழகாக வரிசைப் படுத்தி அருமையான முறையில் வடித்துத் தந்துள்ளார்.

"இன்தமிழுக்கு ஏற்றம் தந்த இலக்கியச் சிற்பி ஒருவரின் வாழ்க்கையோவியத்தை வரைந்து காட்டும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றதில் நான் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்" என்று எழுதி தன் முன்னுரையில் உவகையுறுகிறார் இந்நூலாசிரியர் பேராசிரியர் ஹ.மு.நத்தர்சா.

இவர் சென்னை புதுக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர். படைப்பிலக்கியவாதி. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வழங்கியுள்ளார். புதுவையரசின் 1996- ஆம் ஆண்டிற்கான கம்பன் புகழ்ப்பரிசு பெற்றவர். வரலாற்று ஆய்வுநூல் ஒன்றும் எழுதியுள்ளார். இந்திய பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆய்வுக் கோவைகளில் இக்கால இலக்கியம், நாட்டுப்புற இலக்கியம் குறித்து ஏராளமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இஸ்லாமிய சிறுகதைகள் குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

எளிய நடையில் செந்தமிழுக்கு சிறப்பையளித்த 'இறையருட் கவிமணி'யின் பெருமையினை சான்று கூறும் இவரெழுதிய இந்நூல் ஒவ்வொருவரும் படித்து இன்புறத்தக்கது.

- அப்துல் கையூம்

Friday, January 9, 2009

காவியச் சுவை

பொற்சைவ வைணவமும்
புத்தபிரான் பொன்னுரையும்
நபிகள்பிரான் நல்லுரையும்
பைந்தமிழின் பண்பேற்றுக்
கற்போரை பிடித்திழுத்துக்
கனிதமிழின் சுவையூட்டி !
நாயன்மார் நாவமுதும்
நல்லாழ்வார் பாசுரமும்
மேயபுகழ் மேகலையும்
மேம்படு சிந்தாமணியும்
மாமுனி தேம்பாவணியும்
மாண்பேறு சீறாவும்
காமுறவே எல்லாரும்
கண்ணாரக் கண்டபோதும்
காவியமாய் இந்நாட்டில்
கதிர்வீசக் காண்கின்றோம்.

- இறையருட் கவிமணி

கவிதை

சீரிய செந்தமிழ் எம்மொழியாம் – எங்கும்
சிறந்திடும் இஸ்லாம் எம் வழியாம்
நேரிய இலக்கியம் போற்றுவதே – எங்கள்
நெஞ்சம் இனித்திடும் நற்பணியாம்

நிறையுள்ள செய்யுளும் உரைநடையும் – பொன்
நெஞ்சத்தைக் காந்தமாய்க் கவர்ந்திழுக்கும்
கறையில்லா இஸ்லாம் இலக்கியமோ – ஒளிக்
கதிர்மழைக் குன்றேன உயர்ந்திருக்கும்.

தனிப்பெரும் சிறப்புகள் மிகவோங்கி – நன்கு
தழைத்திடும் நிலத்தினை வாழ்த்திடுவோம்
இனித்திடும் தமிழினில் மலர்ந்திருக்கும் – உயர்
இஸ்லாம் இலக்கியம் வளர்த்திடுவோம்

- இறையருட் கவிமணி

Thursday, January 8, 2009

நிறைவான வாழ்க்கை அவர் வாழ்க்கை

“கவிஞர்கள் பலரை நான் அறிவேன். சிருங்கார ரசனை ததும்ப அழகிய பெண்களின் அங்கங்களை வருணிப்பவர்கள் எத்தனை பேர்?

கைத்தட்டலுக்காகத் தம் கவிதைகளை அரங்கேற்றுபவர்கள் எத்தனைப் பேர்?

கற்பனைகள் தோன்றுவதற்காக மதுப்பிரியர்களாக மாறித் தள்ளாடியவர்கள் எத்தனைப்பேர்?

அரசியல்வாதிகளை அளவுக்கு மீறிப் புகழ்ந்து அவர்களுடைய அரவணைப்பில் பிரமுகர்களாகக் காட்சியளிப்பவர்கள் எத்தனைப்பேர்?

ஆனால் இத்தகைய மாசுகளும், தூசுகளும், தம் மீது படியாத மர்ஹூம் இறையருட் கவிமணி அவர்களை எப்படி மறக்க முடியும்?”

என்ற சிந்திக்க வைக்கக் கூடிய வினாவை நம் முன் வைக்கின்றார் உத்தம பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கெளதிய்யாக் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எஸ்.ஏ.செய்யது அப்துல்லாஹ் அவர்கள்.

“தோன்றிற் புகழொடு தொன்றுக – அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று”

என்று பகர்வார் ஐயன் திருவள்ளுவர்.

மக்கள் நிறைந்த சபையில் - கற்றவர் நிறைந்த சபையில்... தோன்றுவீரேயானால் புகழொடு தோன்றுவீராக... இல்லையேல் தோன்றாமலிருப்பதே நன்று... என்று இதற்குப் பொருள்.

பிறந்த பிறப்புக்கு ஓர் அர்த்தம் வேண்டும். ஒரு குறிக்கோள் வேண்டும். நான் அவரிடம் மாணவனாக பயின்ற காலத்தில் சுவாமி விவேகானந்தரின் கீழ்க்கண்ட அறிவுரையை அவர் அடிக்கடி நினைவில் நிறுத்துவார்.

“எழுந்திரு !
இவ்வுலகோர் இயங்க உன் தோள் கொடுத்து உதவு.
எத்தனை நாட்களுக்கு இந்த வாழ்வு?
இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்ததற்கு
ஏதேனும் ஒரு நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்லல் வேண்டும்.
இல்லையேல், உனக்கும், கல்லிற்கும். மண்ணிற்கும், மரத்திற்கும்,
என்னதான் வேற்றுமை?”

என்ற பொன்வாக்கிற்கு ஏற்றார்போல் பேராசிரியரின் வாழ்வு ஓர் அர்த்தமுள்ள சகாப்தமாகவே இருந்தது. ‘கண்டதே வாழ்க்கை, கொண்டதே கோலம்’ என்றில்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்கி இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்கள்.

“அப்துல் கபூரோ, ஆமா எவர்க்கும் போடாத அரிமா” என்று கவிஞர் மு.மேத்தா கூறுவதைப் போல் தலை நிமிர்ந்து வாழ்ந்த கம்பீரக் கவிக்குயில் நம் பேராசிரியர்.

அப்துல் கையூம்

திரு அரங்கநாதர்


கவிக்கோ அப்துல் ரகுமான்

“வெற்றி பல கண்டு நான்
விருது பெற வரும் போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்”

என்று கவிக்கோ அப்துல் ரகுமானைப் புகழ்ந்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி.

நாவன்மையும், அறிவுக் கூர்மையும் படைத்த கவிக்கோ அவர்கள் 1973-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதியன்று திருச்சியில் நடந்த முதல் இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மேடையில் இறையருட் கவிமணியை இவ்வாறு புகழ்ந்தார்.

அருவிதாங் கேட்டாலும் அழகுயாழ் குழலென்னும்
கருவிதாங் கேட்டாலும் கானவானம் பாடிக்
குருவிதாங் கேட்டாலும் கூடி வந்து பாராட்டும்
திருவிதாங் கோட்டுச் செழும் புலவ! புகழ்பூத்த
பிறைப் பள்ளிக் கூடத்தில் பிஞ்சுப் பிறைகளை
நிறைநிலாவாய் உருவாக்கும் நீலவான் கரத்தாரே!
பாவெல்லாம் பரமனுக்கே படையலிட்டுத் தமிழகத்தார்
நாவெல்லாம் நாயகத்தை நடமாட விட்டவரே!
இறையருட் கவிமணியே! இவ்வரங்க நாதரே!

போதனை

நற்பண்புகளை நறுக்குத் தெறித்தாற்போல் பிஞ்சு உள்ளங்களில் பதிய வைக்க ஆரம்ப பள்ளிகளில் ஆத்திசூடியை சின்னஞ் சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் உத்தியை நாம் காணலாம்.

ஆத்திசூடி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஒளவையார்தான். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல் உயிரெழுத்து, மெய்யெழுத்துக்களை அகர வரிசையில் பச்சிளம் பிள்ளைகளின் உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் பதிய வைக்கவும், அறப்பண்புகளை அழுத்தமாக போதிக்கவும் ஆத்திசூடி உகந்தது.

ஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்து மாற்றுக் கருத்துக்களை உதித்தவன் நமது மீசைக் கவிஞன் பாரதி.

'தையல் சொல் கேளேல்"
என்று பாட்டி சொல்லி வைத்தாள்.
'தையலை உயர்வு செய்"
என்று எதிர் பாட்டு பாடி வைத்தான் பாரதி.

'ஆறுவது சினம்’ என்றாள் ஒளவை.
இவனோ 'ரௌத்திரம் பழகு’ என்றான். '

‘நுப் போல் வளை’ என்றாள் பாட்டி
'கிளை பல தாங்கேல்" என்றான்
பைந்தமிழ்த் தேனி.

‘தொன்மை மறவேல்’ என்றாள் ஒளவை.
'தொன்மைக் கஞ்சேல்" என்றான் பாரதி.

'போர்த் தொழில் புரியேல்’– இது ஒளவை.
'போர்த்தொழில் பழகு’- இது பாரதி .

'மீதூண் விரும்பேல்’ என்றாள் அவள்.
'ஊண் மிக விரும்பு’ என்றான் இவன்.

இவர்கள் இருவரும் கூறாத கருத்துக்களை இறையருட் கவிமணி அவர்கள் இனிமையுற போதிக்கும் பாங்கினை ‘மனைவிளக்கு’ நூலில் நாம் சுவைத்து மகிழலாம்.

‘இசைவைப் பெறாதயல் இல்லம் நுழையேல்’
‘தரையின் மீது தருக்குடன் நடவேல்’
‘குரலைத் தாழ்த்தி குணமுறப் பேசு’
‘தெரிந்ததைப் பேசு; தெளிவாய்ப் பேசு’
‘மெய்யால் இன்பம் ; பொய்யால் அழிவு’
‘பணிவு உயர்த்தும் ; பெருமை தாழ்த்தும்’


- அப்துல் கையூம்

கடலாய் விரிந்த மழைத்துளி

நாம் ..
வெளியில் தெரிய
உடலுக்கு மட்டும் ‘இஹ்ராம்’ தரிக்கிறோம்.
இறையருட் கவிமணி அவர்களோ – தம்
உள்ளத்திற்கே ‘இஹ்ராம்’ தரித்த
மெழுகுவர்த்தி !

தன்னல மறுத்துத்
தன்னையே கரைத்து
ஒளியினைக் கொடுத்தே
உருகிப் போனவர் !

நாக்குத் திரியில் மறைச்சுட ரேந்தி
தீனெறி காட்டிய தியாக விளக்கு !

வளர்ச்சி என்பதன் வாய்மைத் தத்துவ
மலர்ச்சி இந்த மெழுகு வர்த்தியில்..
‘நெடிலாய்ப் பிறந்து குறிலாய் வளரும்’
வடிவ முரணில் வழிவது ஞானம் !

உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்
அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்
பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்
இறயருட் கவிமணி அவர்களின் உள்ளம் !

அதனாலேதான் ..
கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து
அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென்றே
பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை
நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார் !

இதனை..
‘பதவி இறக்கம்’ என்றே
விதண்டாவாதிகள் விவரித்தார்கள் !

நாற்றங் காலாய், நம்குல மணிகளை
நெஞ்சில் வாங்கி வளர்த்த கவிமணி ..
இறங்கி நீரைப் பாய்ச்சி நிமிர்த்ததில்
பிறங்கும் ‘ஏற்றப்’ பொலிவினை எய்தினர் !

அவர்கள்,
உள்ளும் புறமும் தூய வெள்ளையாய்
அல்லும் பகலும் ஆற்றிய அறத்தால் –
தன்னையே இறைவனில் தாரை வார்த்தனர் !

இறைவனில் தன்னை அர்ப்பணித் தார்க்கு
மறைவு உண்டு; மரணம் இல்லை !!

மண்ணில் விழுந்த மழைத்துளி வற்றிக்
கண்ணை விட்டே காட்சி மறையும் !

கடலில் விழுந்த மழைத்துளிக் கூட
காணா மல்தான் போய்விடு கின்றது !
ஆனால் அதுவோ ..
வற்றாக் கடலாய் வடிவெடுக் கின்றது !

இறையருட் கவிமணி அவர்கள் – ஒரு கடல் !!
இறையோ டிணைந்தோர் – (தம்)
இறப்புக்குப் பின்னும்
சிறப்புச் செய்யப்பட்டே வாழ்கிறார் !

கோணல் மாணல் இன்றி நேராய்
வானை நோக்கி வளர்ந்த நெடுமரம்,
வேர்தறித்து வீழ்த்தப் பட்ட பின்னரும் கூட
நிலைக்கு வந்து நிற்பதைப் பார்க்கிறோம்;..
கொடிக் கம்பமாய் !!

மரணம் என்பது –
நேராய் வளர்ந்த மரத்துக்குக் கூட
நிலையான வீழ்ச்சியை நல்குவ தில்லை !
நேர்வழி நடந்த இறை நேயரையா
கோர மரணம் கொன்றொழித்து விடும்?

நேர்மைக்கு வீழ்ச்சி நிரந்தர மில்லை;
தீமைக்கு வாழ்வு நிலைப்பது மில்லை..

- கஃபூர் தாசன்

வாழும் வானவில்


கவிஞர் ஈரோடு தமிழன்பன்

அடங்கக் கற்ற மலையாய்
அமைதி காத்த கடலாய்
ஒடுங்கி நின்ற விசும்பாய் – நான்
உத்தமர் கபூரைக் கண்டேன்.

அதட்டத் தெரியாத் தென்றல்
அவரின் மெல்லிய பண்பு !
கொதிக்கத் தெரியா நிலவு – அவரின்
குளிர்ச்சி ததும்பும் நடத்தை !

உலர்ந்து போகாப் பனியாய்
உள்ளம் அன்பு பொழியும் !
மலர்ந்து வாடா முறுவல் – அவர்
வ்ட்ட முகத்தில் வாழும் !

புனையும் குழந்தைப் பாட்டில்
பொன்னால் தொட்டில் கட்டிக்
கனிகள் கொய்து தருவார் – அவரே
சுளையாய் கனிந்து வருவார் !

ஓடையும் நதியாய் மாறும்
ஒழுங்கில் வெள்ளம் பாயும் !
மேடையில் தேனின் அருவி – அந்த
மேதையின் பொழிவில் வழியும்

தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாச் சுதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் !

வாழும் வான வில்லாய்
வாழ்வார் தமிழர் நெஞ்சில்
ஏழு வண்ண எண்ணம் – கபூர்
ஏந்தல் ஏந்தி வாழும்.

Wednesday, January 7, 2009

by ஞானம்

Professor Gafoor has been honoured with the title "Iraiyarul Kavimani" (the gems like poet with Divine Grace).

Infact divine grace is the implicit force to learn, read, reflect and at every stage of our life. There is no wonder that the inspiring songs of this scholar will invoke reflective thinking in every one.

I wish that every one should read his poems and derive maximaum pleasure as well as benefit out of them.

I also wish that the scholar should compose a number of similar poems as laurels to his laudable mission of patronising Tamil language and literature.

- A Gnanam
Former Vice - Chancellor of University of Madras

பள்ளி வாசல்

"More things are wrought by prayer than this world dreams of" என்றான் ஆங்கிலக் கவிஞன் ஆல்ப்ரெட் லார்ட் டென்னிஸன். இஸ்லாமியர்களின் தொழுகைத் தளமாக விளங்கும் பள்ளிவாசலுக்கு பொருத்தமான விளக்கத்தை இதைவிட சிறப்பாக யாராலும் சொல்ல இயலுமோ?

உருக வரும் தொழுகையினால்
உத்தமர்கள் சித்திபெற
வருகவென அழைக்கின்ற
வான்சுட்டும் பள்ளிவாசல் !

புவன வாயில் புகுந்தவர்கள்
பூமணக்கப் புகழ்மணக்கச்
சுவன வாயில் நுழைவதற்குச்
சுடர்காட்டும் பள்ளிவாசல் !

ஆத்மீக ஒளிபரப்பி
அகவிருளை ஓட்டுகின்ற
சாத்மீக மின்நிலையம்
சாந்தி வழிப் பள்ளிவாசல் !

முயற்சியினால் இறையவனின்
முத்திரையைப் பெறுவதற்குப்
பயிற்சியினை வழங்குகின்ற
பாசறையே பள்ளிவாசல் !

- இறையருட் கவிமணி

நூல் வரிசை

கவிதை

1. நாயகமே!
2. அன்னை பாத்திமா!
3. நபிமணி மாலை!
4. இறையருட் மாலை
5. நபிமொழி நானூறு
6. பொன்மொழி நானூறு
8. காஜா மாலை
9. பீரப்பா மாலை
10. முஹ்யித்தீன் மாலை
11. தலைப்பா (கவியரங்கக் கவிதைகள்)
12. துஆ - 100 (பிரார்த்தனைப் பாடல்கள்)

உரை நடை

1. இலக்கியம் ஈந்த தமிழ்
2. அற வாழ்வு
3. வாழும் நெறி இஸ்லாம்
4. இஸ்லாமிய இலக்கியம்
5 இனிக்கும் இறைமொழிகள்
6. மிக்க மேலானவன்

குழந்தை இலக்கியம்

1. அரும் பூ

நபிமொழி நானூறு

ஒரு கையில் இறைவேதம்
மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமகென்ன தயக்கம்?
கண்களில் ஏனிந்த கலக்கம்?

என்று பாடுவார் இசைமுரசு நாகூர் E.M.ஹனீபா அவர்கள். 'குர்ஆன்' எனப்படும் இறை வேதமும், 'ஹதீஸ்' எனப்படும் நபிகள் நாயகம் நவின்ற நன்மொழிகளூம் முஸ்லீம்களுக்கு இரு கண்கள் போன்றது.

நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகளை அதன் அர்த்தங்கள் சிறிதளவும் மாறாத வகையில் செந்தமிழில் கவிதை வடிவில் "நபிமொழி நானூறு" என்ற நூல் மூலம் நமக்கு அளித்துச் சென்றவர் இறயருட் கவிமணி அவர்கள்.

அரபி, தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் அன்னார் புலமை பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாயகம் நவின்ற "ஹதீஸ்" பொன்மொழியை எதுகை மோனை சுவைபட இயற்றமிழில் அவர்கள் கையாண்டிருக்கும் முறையை பாருங்கள் :

"கையால் தடுப்பீர் தவறுகளை;
கையா லின்றேல் நாவதனால்;
உய்யா நின்றால் உள்ளத்தால்
ஒறுப்பீர் என்பது நபிமொழியாம்"

அப்துல் கையூம்

by சிற்பி

"அதங்கோட்டாசான்"

அறிவினுக்கு அறிவாய் தெளிவினும் தெளிவாய்த் திகழும் ஆசிரியப் பெருந்தகை கா. அப்துல் கபூர் அவர்களின் செம்மல் உள்ளம் செந்தமிழில் திளைத்திருக்கும் தூய உள்ளம் குழந்தை நலமுடையது.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழுக்குத் தந்த கவிஞர்கள் பலர். அந்தப் பாரம்பரியத்தின் செழும் கிளையாகத் திகழ்பவர் பேராசிரியர் அப்துல் கபூர் அவர்கள். நாஞ்சில் நாடு முன்னர் ஓர் அதங்கோட்டாசானை நல்கியதுபோல் இன்றும் திருவிதாங்கோடு தந்த "அதங்கோட்டாசான்" நமது ஆசிரியர்.

- சாகித்திய அக்காடமி விருது பெற்ற
"சிற்பி" பால சுப்பிரமணியன்

by ஆளுர் ஜலால்

சிம்மாசனமிட்ட மன்னவர்

சின்ன அரும்புகளின் இனித்த மழையே !
என் நேச இறையருட் கவிமணியே !
பாவைத் துவைத்து என்கள் அக்த்திற்குள்
சிம்மாசனமிட்ட மன்னவா !
சிக்கறுந்த உங்களின் முன்னால் வா சிக்க வந்தேன்,
உங்களின் மெய்ஞ்ஞானப் பாவைப் பாடி.

- 'முஸ்லிம் முரசு' ஆசிரியர் ஆளுர் ஜலால்

முதல் தமிழ் முதல்வர்

தமிழ் நாட்டின் கல்லூரி வரலாற்றில் முதன் முதலில் முதல்வரான தமிழ்ப் பேராசிரியர் இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர் அவர்கள்.

தமிழுக்கு முதலிடம் தந்து தமிழறிஞர்களைக் கெளரவித்ததில் முன்னோடியாக இருந்தது உத்தமபாளையம் ஹாஜி. கருத்த ராவுத்தர் கெளதிய்யாக் கல்லூரி. இக்கல்லூரி நிர்வாகம் 45 ஆண்டுகளுக்கு முன்பே கா.அப்துல் கபூர் என்ற தமிழ்ப் பேராசிரியரைக் கல்லூரி முதல்வராக்கிப் பெருமைபடுத்தியது. தமிழ் நாட்டின் கல்லூரி வரலாற்றில் முதன் முதலில் முதல்வரான தமிழ்ப் பேராசிரியர் அப்துல் கபூர்தான்.

சி.இலக்குவனார், ஏ.சி.செட்டியார், வ.சுப.மாணிக்கம், சுப.அண்ணாமலை, தமிழ்க் குடிமகன் போன்ற பல தமிழ்ப் பேராசிரியர்கள் இதன் பின்னரே கல்லூரி முதல்வராகிப் பெருமை சேர்த்தனர் என்பது எண்ணத் தக்கது.

உத்தமபாளையம் கல்லூரியில் 45 ஆண்டுகளுக்கு முன்னால் முதல்வராக இருந்த நேரத்தில், அப்போதைய தமிழக ஆளுநர் திரு. விஸ்ணுராம் மேதி ஒரு மருத்துவமனையத் திறப்பதற்காகக் கம்பம் வந்தார். அந்த நேரத்தில் ஆளுநரின் ஆங்கில உரையைத் தமிழில் மொழி பெயர்த்தவர் அப்துல் கபூர். பேராசிரியர் சிறப்பாக உடை அணிந்திருந்ததைக் கண்ட அவ்வூர் மக்கள் இவர்தான் ஆளுநர் என்று பேசக் கூடிய முறையில் மிடுக்கான உடையில் தோன்றியிருந்தார்.

டாக்டர் எஸ்.ஷாகுல் ஹமீது எம்.ஏ., பிஹெச்.டி.ஆய்வு நெறியாளர், தமிழாய்வுத்துறை, புதுக் கல்லூரி, சென்னை-14.

நன்றி : தினமணி 2001, (ஈகைப் பெருநாள் மலர்)

by நாகூர் ரூமி





இறையருட் கவிமணியைப் பற்றி

நாகூர் ரூமி

அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமுமோ ரிறையின் இனிய பேர் போற்றி

இந்த இரண்டு வரிகளைப் படித்தவுடன் என் மனதில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சந்தோஷ உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு நன்றியுணர்ச்சி என்றுகூட அதைச் சொல்லலாம். முஸ்லிம்கள் எந்தக் காரியத்தையும் தொடங்கும்போது அரபியில் ‘பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்’ என்று சொல்வார்கள்.’ இறைவனின் பெயரைக் கொண்டு தொடங்குகிறோம்’ என்று பொதுவாகப் பொருள்தரும் அந்த வாக்கியத்தை இவ்வளவு அழகாகக் கவிதையில் பார்த்தபோது, இனி இப்படியேகூடத் தொடங்கலாம் என்று தோன்றியது. இந்த இரண்டு வரிகளும் மார்க்கப் பற்று மிகுந்த ஒரு கவிஞரை எனக்கு அடையாளம் காட்டின.

அந்த அறிஞர்தான் ‘இறையருட் கவிமணி’ என்ற புகழ்ப்பெயருடன் அறியப்படும் கா.அப்துல் கபூர். அவரைப் பற்றிய சாகித்திய் அகாதெமியின் வெளியீடு இந்த நூல்.

அதை முழுவதும் படித்துப் பார்த்தபோது சில ஆச்சரியங்கள் காத்திருந்தன. அதைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த மதிப்புரையின் நோக்கம்.
பேராசிரியர்,எழுத்தாளர், கவிஞர், குழந்தை இலக்கியம் படைத்தவர், கல்வியாளர், பேச்சாளர், மார்க்க அறிஞர், பக்தி இலக்கியகர்த்தா, பத்திரிகையாளர், பன்மொழி வல்லுணர் என பன்முகம் பளபளக்கும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஒளிர்ந்த அவர்திருவிதாங்கோட்டில் 1924ல் பிறந்து 2002ல் மறைந்தவர்.

1946ல் இருந்து 67வரை சென்னை, வாணியம்பாடி, திருச்சி, உத்தம பாளையம், அதிராம்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்த கல்லூரிகளில் பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும், முதல்வராகவும், கீழ்த்திசை மொழித்தலைவராகவும் இருந்திருக்கிறார். 1967க்குப் பிறகு வண்டலூர் பிறைப்பள்ளி முதல்வராகவும், கும்பகோணம் அல் அமீன் உயர் நிலைப்பள்ளி நிர்வாகியாகவும் இருந்திருக்கிறார். திருச்சி அகில இந்திய வானொலி நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், சென்னைப் பல்க்லைக்கழக செனட் உறுப்பினராகவும், கேரளப் பல்கலைக்கழக் பாடநூல் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறார்.
உர்து முஷாயிரா பாணியில் முதன் முதலாக தமிழ்க் கவியரங்கை வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் 1948ல் அறிமுகம் செய்து வைத்தவர் என்ற பெருமையும், முதன் முதலாக ஒரு கல்லூரியின் முதல்வாராகப் பொறுப்பு வகித்த தமிழ்ப் பேராசிரியர் (ஹாஜி கருத்த ராவுத்தர் கௌதியா கல்லூரி, உத்தமபாளையம்) என்ற பெருமையும் இவரையே சேரும்.

முன்னாள் ஆளுனர் பி.சி.அலெக்சாண்டர், மதியழகன், பேரா.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர் இவரோடு உடன் பயின்ற மாணவர்கள். கலைமாமணி மணவை முஸ்தபா, சிற்பி,சாதிக் பாட்சா போன்றோர் இவருடைய மாணவர்கள். பன்னிரண்டு கவிதை நூல்களும் ஆறு உரைநடை நூல்களும் எழுதிய இவர் குழந்தை இலக்கியத்தில் பாரதிக்கும், பாரதிதாசனுக்கும், கவிமணிக்கும் அடுத்த இடத்தில் இருப்பவர். ‘அரும்பூ’ என்ற குழந்தைகளுக்கான பாடல்களின் தொகுப்பு இவருக்கு அந்த புகழைக் கொடுக்கிறது.

நண்பன் என்ற கையேட்டுப் பிரதியில் முதல் கவிதை எழுதி இலக்கிய வாழ்வைத் துவக்கிய இவர், பின்பு ‘மதிநா’ என்ற ஒரு மாத இதழை சிறப்பாக நடத்திக்காட்டினார். ‘மதிநா’ என்ற பெயர் முஹம்மது நபியவர்கள் அடக்கமாகியுள்ள புனித நகரான மதினாவைக் குறிப்பதாகவும் மதி, நா ஆகிய இரண்டையும் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டது அதன் சிறப்பு. இந்த இதழின் மூலமாகத்தான் தோப்பில் முகமது மீரானின் படைப்புகள்பிரபலமடைந்தன.

உரை நடை நூல்கள்

‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற இவருடைய நூல் சென்னை, அண்ணாமலை மற்றும் கேரள பல்கலைக்கழகங்களில் பாடநூலாக வைக்கப்பட்டது. பதினோரு தலைப்புகளில் வானொலிஉரைகளாக பேசப்பட்டதன் தொகுப்பே இது. அராபியர்கள் இந்தியாவைக் குறிக்க ‘ஹிந்த்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இந்திய நாட்டின் புளி அவர்களுக்கு அவர்களுடைய நாட்டின் பேரீச்சம் பழத்தை நினைவு படுத்தியதால் அதை அவர்கள் ‘தமருல் ஹிந்த்’ என்று குறிப்பிட்டனர். அதுவே ஆங்கிலத்தில் ‘டாமரிண்ட்’(tamarind) என்று ஆனது! இதுபோன்ற பல அரிய, ஆச்சரியப்படத்தக்க தகவல்கள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன.

அறவாழ்வு, வாழும் நெறி இஸ்லாம், இஸ்லாமிய இலக்கியம், இனிக்கும் இறைமொழிகள், மிக்க மேலானவன் ஆகியவை இவருடைய மற்ற கட்டுரைத் தொகுப்பு நூல்களாகும்.

‘இஸ்லாமிய இலக்கியம்’ என்ற நூலில் தமிழ் மற்று அரபி மொழிகள் பற்றிய கட்டுரையும் முகலாய ஆட்சியாளர்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றிய கட்டுரையும் குறிப்பிடத்தக்கது.

‘வாழும் நெறி இஸ்லாம்’ என்ற நூல் இவருடைய பல்வேறு சொற்பொழிவுகளின் தொகுப்பு. இதிலும் அரபி மொழி பற்றிய ‘வையகம் போற்றும் வான்மொழி’, ‘அறிவுத் துறையில்முஸ்லிம்களின் பங்கு’, ‘பாரகம் போற்றும் நூலக முன்னோடிகள்’ ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.
திருக்குர்ஆனின் வசனங்களுக்குத் தெளிவுரையாக அமைந்த 21 கட்டுரைகளின் தொகுப்பு ‘இனிக்கும் இறைமொழி’ என்ற நூல்.

தன் இறுதி நாட்களில் திருக்குர்ஆனுக்கு இவர் எழுதிய விளக்கக் கட்டுரைகள்தான் ‘மிக்க மேலானவன்’ என்ற நூலாக உருப்பெற்றது. இவருடைய விசாலமான அறிவையும் ஆழமான பார்வையையும் உரை நடையையும் கவிதா நடையாக அமைக்கும் திறனையும் இவருடைய எல்லா படைப்புகளிலும் நாம் காணலாம்.

சிறுவர் இலக்கியம்

இவர் நடத்திய ‘மதிநா’ இதழில் ‘சிறுவர் சோலை’ என்ற பகுதியில் அபூஜமால் என்ற பெயரில் இவர் எழுதிய குழந்தைப் பாடல்கள்தான் பின்னர் ‘அரும்பூ’ என்ற பெயரில்தொகுக்கப்பட்டது. இப்பாடல்கள் குழந்தைக்ள் மனதில் நீங்கா இடம்பிடித்துக் கொண்டன. கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ரப்பர் எஸ்டேட்டில் குழந்தைகளின் திற்னைச்சோதிக்கும் இரண்டு நாள் நிகழ்ச்சியொன்றில் விருந்தினராகக் கலந்து கொள்ள எழுத்தாளர் தோப்பில்முகமது மீரான் சென்றிருந்தபோது, ஒரு குழந்தைப் பாடலைச் சொல்லி இதை எழுதியது யார் என்று கேட்டபோது, ‘இறையருட் கவிமணி கா.அப்தில்கபூர்’ என்று ஒரு தொழிலாளியின் குழந்தை பதில் சொன்னதை தோப்பில் பதிவு செய்திருக்கிறார்!

‘இறைவா உனக்கோர்
இணையே இல்லை
நிறைவே தருவாய்
நேர்வழி காட்டுவாய்
நல்லவை செய்யும்
நாட்டம் நல்குவாய்
அல்லவை தவிர்க்கும்
ஆற்றல் தருவாய்


என்று துவங்கும் ‘இறைவா’ என்ற முதல் பாடல் மழலைகளின் உள்ளத்தில் நல்ல விதைகளை எளிதாக விதைத்து விடுகிறது.

கணிதம் கற்றுக்கொடுக்கும் பாடல்களில்கூட, கணிதத்தோடு கருத்தையும் கற்றுக்கொடுக்கிறார்:

எண்ணத் தொடங்கு ஒன்று
என்றும் இறையை ஒன்று!
ஒன்றும் ஒன்றும் இரண்டு
ஒளிரும் கண்கள் இரண்டு!


‘மாலை மாற்று’ என்று கூறப்படும் சொற்களைத் திருப்பிப் படித்தாலும் அதே பொருளைத் தரும் வரிகளை உள்ளடக்கிய பாடல்களையும் எழுதி சோதனை செய்துள்ளார்:

வாத மாதவா
தேனு மீனுதே
மோக ராகவா
மோரு தீருமோ
யானை சேனையா
வாடி ஆடிவா


அலைவதினாலே அலையாகும்
திரள்வதினாலே திரையாகும்


என்று காரண காரியத் தொடர்பை உணர்த்தும் வகையிலான பாடல்களும் எழுதியுள்ளார். இதேபோல, ஆங்கிலத்தில் ‘ஹோமோனிம்ஸ்’(homonyms) என்று சொல்லப்படும் ஒலி வடிவம்ஒன்றாகவும், வரி வடிவம் வேறாகவும் இருக்கும் சொற்களை குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்களை எழுதியுள்ளார்:

ஆற்றின் ஓரம் கரையாகும்
ஆடையில் படுவது கறையாகும்
காட்டில் கொல்வது புலியாகும்
வீட்டில் கொள்வது புளியாகும்


புதிர்கள்,கதைகள் என பல்வேறுபட்ட வடிவங்களில் இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் நாட்டின் பள்ளிகள் தோறும் இப்பாடல்களைப் பாடமாக வைத்தால் நம் குழந்தைகள் நிச்சயம் விரைவாகப் பயனடைவர்.

மாலை இலக்கியம்

இறையருள் மாலை, திருமறை மாலை, நபிமொழி மாலை, நாயக மாலை, நபிமணி மாலை, பாத்திமா மாலை, காஜா மாலை, முஹ்யித்தீன் மாலை என ஏராளமான புகழ்ச்சிப் பாக்கள் அடங்கிய தொகுப்பு இது. இவற்றின் பெரும்பகுதி நாகூர் ஈ.எம்.ஹனிபாவால் பாடப்பட்டு புகழடைந்தவை.இசைத்தட்டில் கம்பீரமாக ஒலித்த இப்பாடல்கள் பாமரர்களின் இதயத்தினுள் சென்று இடம் பிடித்தன.

ஆதியருள் கனிந்திறங்கி
அமரர் கோன் வழியாக
நீதிநபி மாமணிக்கு
நிறைவளித்த திருமறையாம்


என்று தொடங்கும் திருமறை மாலையின் பாடலும் நாகூர் ஹனிபா பாடியதுதான். ஹஸ்பீரப்பீ ஜல்லல்லாஹ், அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன், ஆளும் இறைவன் தூதர்நபி, விண்ணகமும் மண்ணகமும், அருளாளன் அன்புடையோன் ஆகியவை மேலும் சில உதாரணங்கள்.

நல்ல தமிழில், அழகு தமிழில் பிரவாகம் போலப் பேசும் வல்லமை படைத்த இவர் இடுக்கன் வருங்கால் நகுக எனும் வள்ளுவன் வாக்குக்கு ஏற்ப, துன்பம் வந்தபோதும்கூடநகைச்சுவை உணர்வோடு பேசியிருக்கிறார். மூட்டு வலியால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருந்தபோது ஒரு நண்பர் இவரிடம், எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சிலேடையாக, ‘உடம்பில் முக்கால் பாகம் நன்றாக இருக்கிறது. கால் பாகம்தான் நன்றாக இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார்!

அற்புதமான படைப்பாற்றல் கொண்டவராகவும், சரியான ஆன்மீக வாதியாகவும், நல்லாசிரியராகவும் செயற்கரிய சேவைகள் பல செய்த இந்த மாமனிதரை, சமுதாயம் அடையாளம் காண வேண்டியது காலத்தின் க்ட்டாயம். இவரைப்போல எத்தனைபேர் அறியவேண்டிய விதத்தில் இன்னும் அறியப்படாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை.

இறையருட் கவிமணியை அடையாளம் காட்டிய பேராசிரியர் நத்தர்சாவும், அடையாள கண்டுகொண்ட சாகித்திய அகாதெமியும் நிச்சயம் நமது பாராட்டுக்கு உரியவர்கள்.

- நாகூர் ரூமி -

என் ஆசான் - அப்துல் கையூம்


(முன் வரிசையின் நடுவில் உட்கார்ந்திருப்பவர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர். அவருடன் பிறைப்பள்ளியின் முதல் அணிவகுப்பு மாணவர்கள். பின்வரிசை வலதுகோடியில் கட்டுரை ஆசிரியர் அப்துல் கையூம்)

“அருளன்பு பண்பில் அளவற்ற உந்தன்
திருநாமம் போற்றி துவக்குகின்றேன் அல்லாஹ்”

திருவிதாங்கோடு ஈந்த தீந்தமிழ்ப் பாவலனை என் ஆசான் என்று கூறிக்கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. காட்டாற்று வெள்ளமென பெருக்கெடுத்து வரும் அவரது கன்னித்தமிழை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற பாவேந்தனின் பாடலை மெய்ப்பிக்கும் வகையில் அவரது தீந்தமிழ்ப்பேச்சில் தேன்பாகு போன்ற ஒரு இனிமை கலந்திருக்கும்.

இன்று ஒரு மாபெரும் கல்வி நிறுவனமாக கிளைகள் படர்ந்து வண்டலூரில் இயங்கி வரும் கிரசென்ட் பள்ளியின் வரலாற்றுப் பின்னணியை இங்கே நினைவு கூறுவது அவசியம்.

1969-ஆம் ஆண்டு என்னையும் சேர்த்து 19 மாணவர்களின் எண்ணிக்கையுடன் துவங்கப்பட்ட பள்ளி அது. பிறைப்பள்ளியிலிருந்து புறப்பட்ட முதல் அணிவகுப்பு நாங்கள். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் ஹாரிங்டன் சாலையில் “நமாஸி வில்லா” என்ற வாடகை வீட்டில்தான் இந்த சுடர்மிகு விடியல் துவங்கியது. ‘காயிதே ஆஸம்’ முஹம்மது அலி ஜின்னா, அல்லாமா இக்பால் போன்ற பெருந்தலைவர்கள் தங்கிச் சென்ற ஒரு பணக்கார குடும்பத்தின் இல்லம் அது.

பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் என்ற ஒரு மாமனிதரை எங்கள் பள்ளிக்கு முதல்வராக பெற்றது நாங்கள் செய்த அரும்பெரும் பேறு என்றுதான் கூற வேண்டும். அந்த இல்லத்தில் ஒரு பகுதியில்தான் பேராசிரியரின் குடித்தனம். தன் அன்புத்துணைவியார் மற்றும் அருமை மைந்தன் ஜமால் முகம்மதுடன் வசித்து வந்தனர். அந்த அம்மையாரின் கைப்பக்குவத்தில் தயாராகும் அறுசுவை பண்டங்களை பலமுறை சுவைபார்த்த பாக்கியம் என் நாவுக்குண்டு.

ஆறாம் வகுப்பு முதல் மெட்ரிக் வரை - ஆறு ஆண்டுகள் - அந்த மனிதருள் மாணிக்கத்தின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். அது ஒரு குருகுல வாசம் போன்ற அமைப்பு. இருபத்து நான்கு மணிநேரமும் ஒரு தமிழ்க்கடலின் அருகாமையில் இருந்துக்கொண்டு தமிழ்ச்சுவையை பருகிய அனுபவங்களை எழுத்தினில் வடிக்க இயலாது. அரிய மார்க்க ஞானங்களை அவரிடமிருந்து நாங்கள் பெற முடிந்தது.

ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள். கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில் “மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்” என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.

அதே பள்ளியில் தமிழாசிரியராக இருந்து எங்களை ஊக்குவித்த மற்றொரு ஆசான் புலவர் நாஞ்சில் ஷா அவர்கள். ‘நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்’ என்ற நூலை வழங்கியவர். நாஞ்சில் ஷாவின் மாண்பினை கவியரசு கண்ணதாசன் இவ்வாறு புகழ்ந்தார்.

“நாஞ்சில் ஷா காட்டுகின்ற
நல்ல நபி நாயகத்தை
வாஞ்சையுடன் பார்த்தபின்னர்
மற்றவற்றைக் கற்பதற்குக்
கடைகடையாய் ஏறிக்
கால்வலிக்க நான் நடந்தேன்;


எத்தனையோ அற்புதங்கள்
எத்தனையோ அதிசயங்கள்
அன்னை ஆமினா
அளித்தமகன் வாழ்க்கையிலே!”

இவ்விரண்டு நாஞ்சில் நாட்டு நற்றமிழ் நாவலர்களின் நாவாற்றலில் நான் நனைந்து மகிழ்ந்த நாட்களை நினைவு கூறுகையில் என் நெஞ்சமெலாம் தேனாய் இனிக்கும்.

கல்லூரி முதல்வர் பதவியை துறந்து விட்டு எங்களைப் போன்ற பிஞ்சு மாணவர்களுக்கு பாடம் நடத்த வந்த பேராசிரியரை “பிழைக்கத் தெரியாத மனிதர்” என்றே பலரும் விமர்சித்தனர். அதை அவர் ஒரு பதவி இறக்கமாகவே கருதவில்லை. அதற்கு மாறாக எதிர்கால நட்சத்திரங்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாகச் செயல்பட்டார்.

“உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்
அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்
பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்
இறையருட் கவிமணி உள்ளம் !


அதனாலேதான் ..
கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து
அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென
பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை
நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார்.”

பேராசிரியரின் மனோபாவத்தை அறிந்து மனதாரப் புகழ்ந்த அவரது ஆத்மார்த்த ரசிகர் கபூர்தாசனின் வரிகள் இவை. இதனை எழுதிய கவிஞருக்கும் பேராசிரியருக்கும் ஏற்பட்ட ஒரு தெய்வீக நட்பை இங்கே விவரித்தே ஆக வேண்டும். இலக்கிய ஏட்டில் பதிவு செய்யப்பட வேண்டிய சுவையான நிகழ்வு இது. கபிலர் பிசிராந்தையாருக்கிடையே இருந்த நட்புக்கும், ஒளவையார் அதியமானுக்கிடையே இருந்த நட்புக்கும் இணையானது இந்த இலக்கிய பிணைப்பு,

பள்ளி அரையாண்டு விடுமுறையின்போது நான் என் சொந்த ஊர் நாகூர் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பேராசிரியர் என்னை அழைத்தார்கள். அவர்கள் வசம் கத்தை கத்தையாக கடிதங்கள் இருந்தன. பேராசிரியரின் கவிநடையில் காதல் ஏற்பட்டு மனதைப் பறிகொடுத்த ஒரு ரசிகரின் மடல்கள் அது. பேராசிரியரின் சொல்வண்ணத்தில் சொக்கிப்போய் மதுவுண்ட வண்டாய் ரீங்காரமிடும் கவிநயம் சிந்தும் காதல் கடிதங்கள் அவை. நாளடைவில் இந்த இலக்கியக் காதல் முற்றிப்போய் தன் இயற்பெயரை மாற்றி “கபூர் தாசன்” என்று மாற்றி கொண்டார் அந்த ரசிகர்.

“தம்பி! நீ உன் ஊருக்கு அருகாமையிலிருக்கும் காரைக்காலுக்குச் சென்று இந்த முகவரியில் இருக்கும் நபரைச் சென்று சந்தித்து வா!” என்று என்னை பணித்தார்கள். நான் நேரில் சென்று விசாரித்தபோது அந்த வாசகரின் இயற்பெயர் செ.மு.வாப்பு மரைக்காயர் என்று தெரிய வந்தது. நான் கபூர் சாகிப்பிடமிருந்து வந்திருக்கும் மாணவன் என்று என்னை அறிமுகம் செய்தபோது அவர் முகத்தில் ஏற்பட்ட பூரிப்பை பார்க்க வேண்டுமே! தன் ஆத்மார்த்த நாயகனிடமிருந்து வந்த தூதுவனாக என்னைக் கண்ட மாத்திரத்திலேயே உணர்ச்சிவசப்பட்டுப் போனார். பேராசிரியரின் உடல்நலம் குறித்து விசாரித்து அவரது சொல்லாற்றலைப் புகழ்ந்து மணிக்கணக்காக பேச ஆரம்பித்து விட்டார். பாரதிக்கு ஒரு தாசன் பாரதிதாசனைப் போன்று, அந்த பாரதிதாசனுக்கும் ஒரு தாசன் சுப்பு ரத்தின தாசன் (சுரதா) போன்று இந்த கபூர்தாசனின் குருபக்தி கண்டு வியந்துப் போனேன்.

பிறைப்பள்ளியில் எங்களுக்கு தமிழ் பாட வகுப்பு முதல்வரே நடத்துவார். தமிழ் வகுப்பு என்றாலே எங்களது உற்சாகம் பன்மடங்காகும். அந்த கம்பீரத் தோற்றம், அடுக்குத் தொடரில் அதறும் தொனி, அடலேறு போன்ற ஒரு மிடுக்கு, கடல் மடை திறந்தாற்போல் ஊற்றெடுக்கும் அந்த அருந்தமிழ் நடை, கேட்போரை கிறுகிறுக்க வைக்கும்.

“அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையன்”
- என்று சடையப்ப வள்ளலைப் புகழும்போதும்

“உமறு குமுறிடில் அண்ட முகடும் படீரென்னும்
உள்ளச்சம் வையும் பிள்ளாய்”
- என்ற உமறுப் புலவரின் உரையை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் போதும் சிங்கத்தின் கர்ஜனையை கேட்பது போலிருக்கும்.

தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாக் கதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் -


என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு. பேராசிரியரைப் பற்றி குறிப்பிடுகையில் கவிஞர் மு.மேத்தா இப்படிக் கூறுவார் :

“திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோ
ஆமா எவர்க்கும் போடாத அரிமா!

எங்கள் முதல்வர் எழுதி நாங்கள் தினமும் இறைவணக்கப் பாடலாக பாடிக் கொண்டிருந்த “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” என்ற பாடலை இசைத்தட்டாக வெளியிடும் நாட்டம் வந்தது. நாகூர் ஹனீபா அவர்கள் ஐந்து மாணவர்களைத் அவர்களுடன் சேர்ந்து சேரிசை (‘கோரஸ்’) பாட தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஐந்து மாணவர்களில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமையைச் சேர்த்தது. “ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ்” பதிவரங்கத்தில் ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக ஒலிப்பதிவு நடந்துக் கொண்டிருந்தது.

“இம்மை வாழ்வின் சோதனையில்
இதயப் பொறுமை தந்திடுவாய் !
வெம்மை நெருப்பை விட்டெம்மை
விலக்கித் தடுத்துக் காத்திடுவாய் !
செம்மை பொழியும் சுவனத்தின்
செழிக்கும் இன்பம் ஈந்திடுவாய் !
எம்மை நல்லோர் நற்குழுவில்
என்றும் சேர்ப்பாய் இனியோனே !”

என்று அந்த வெண்கலக் குரலோன் இசைமுரசு இசைக்க நாங்களும் சேர்ந்து பாடினோம். இவ்வரிகளின் கருத்தாழத்தை செவிமடுத்த இந்து மதத்தைச் சார்ந்த இசையமைப்பாளரின் கண்கள் பனித்து விட்டன. “எத்தனை சக்தி வாய்ந்த வார்த்தைகள் இவைகள்?” என்று செயலிழந்துப் போனார்.

தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான். உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.

தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’ என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இறையருட் கவிமணி அவர்கள் பன்மொழியில் புலமை பெற்றிருந்தார்கள். தமிழ், மலையாளம், அரபி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அவர்கள் அடைந்திருந்த திறன் அளவிடற்கரியது. தக்கலையில் இஸ்லாமிய ஆராய்ச்சி நிலையம் நிறுவி இறுதி மூச்சுவரை இலக்கியத் தொண்டாற்றி வந்தார்கள்.

பலகாலம் முன்பு ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:

ஈகைத் திருநாள்
இன்பம் தருக;
இறையருள் பொழிக !

அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

- அப்துல் கையூம்


பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக்

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு By முதுவை ஹிதாயத் on May 22nd, 2008

துபாயில் பேராசிரியர் முஹம்மது ஃபாரூக் சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் 21.05.2008 புதன்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக்கூடத்தில் ‘இஸ்லாத்தில் அறிவியல் கண்ணோட்டம்’ எனும் தலைப்பில் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.

துவக்கமாக காயல் மௌலவி முஹம்மது சுலைமான் லெப்பை ஆலிம் மஹ்ளரி இறைவசனங்களை ஓதினார். அதனைத் தொடர்ந்து பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் குறித்த அறிமுகவுரையினை நிகழ்த்தினார்.
இறையருட்கவிமணி பேராசிரியார் கா. அப்துல் கபூர் சாஹிப் அவர்களின் சகோதரர் ஆவார் இவர் என்றார். அவர் ஆற்றியுள்ள பல்வேறு கல்விச் சேவைகள் குறித்து விளக்கமளித்தார்.

அதனைத் தொடர்ந்து சிறப்புச் சொற்பொழிவாளரான பேராசிரியர் கா. முஹம்மது ஃபாரூக் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் பேராசிரியர் கா. அப்துல் கபூர் சென்னை அரசினர் கல்லூரியாக இருந்து, முஹம்மதன் கல்லூரியாகி இன்று காயிதெமில்லத் பெண்கள் கல்லூரி என அழைக்கப்படும் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவராக இருந்த போது அறிஞர் அண்ணா அவர்களை அழைத்து இலக்கிய நிகழ்ச்சி நடத்தினார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி செல்வாக்காக இருந்த நேரம். அறிஞர் அண்ணாவை உள்ளிட்ட திமுக பிரமுகர்களை கூட்டத்திற்கு அழைக்க அச்சப்பட்ட காலத்தில் இதுபோன்ற நிகழ்வை நடத்தியதால் கல்லூரி நிர்வாகம் கபூர் அவர்களை நீக்கியது.

அதனைத் தொடர்ந்து வானம்பாடிகளின் கூடாரமாக விளங்கிய வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி கபூர் சாஹிபை அரவணைத்துக்கொண்டது. அங்கும் அறிஞர் அண்ணாவை அழைத்தார். அப்பொழுது அண்ணா அவர்கள் கபூர் சாஹிப் செல்லுமிடமெல்லாம் என்னை அழைப்பார். அதனைத் தொடர்ந்து கல்லூரியை விட்டு அகற்றப்படுவார் என்றார். வாணியம்பாடியில் உருது கவியரங்கங்கள் நடப்பது வழக்கம். இதன் தொடர்ச்சியாக தமிழில் கவியரங்கங்களை ஏற்படுத்திய பெருமைக்குரியவர் கபூர் சாஹிப்.

இறையருட்கவிமணி எனும் பட்டம் வழங்கிய அதிராம்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரியில் நானும், எனது சகோதரர் கபூர் சாஹிபும் சேர்ந்தோம். அப்பொழுது வண்டலூர் பிறைப்பள்ளியை உருவாக்கிய கல்வி வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்கள் கபூர் சாஹிபை பிறைப்பள்ளி நிர்வாகப் பொறுப்பேற்க அழைத்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார்.

இஸ்லாம் இந்தியாவில் அரேபிய வணிகர்கள் மூலம் பரவிய விதத்தை எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து தென் பாண்டிச் சீமையாம் இராமநாதபுரம், கீழக்கரை, காயல்பட்டணம், தொண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இஸ்லாம் பரவியது. இதனை திருமூலர் ஓரிறைக்கொள்கை என முழங்கி வந்தார்.

அறிஞர் அண்ணா தஞ்சை கூட்டத்தில் பேசிய உரை வீச்சுக்களை நினைவு கூர்ந்த பேராசிரியர் திராவிட கொள்கை ஏக இறைவனை அடிப்படையாகக் கொண்டது தான். இறைவனை மறுப்பதல்ல என்றார்.

அபிவிர்த்தீஸ்வரத்தில் பேசிய அண்ணா 300 க்கும் மேற்பட்ட இஸ்லாமியக் கூட்டங்களில் பேசியுள்ளேன். இந்த நாடு எங்களை கூட்டத்தில் அழைத்து பேச அச்சப்பட்ட நேரத்தில் இஸ்லாமியத் தோழர்கள் எங்களுக்கு தளம் அமைத்துக் கொடுத்ததை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் தான் தொப்பி அணியாத முஸ்லிம் என்றும், சிலுவை அணியாத கிறிஸ்தவன் என்றும் குறிப்பிட்டார்.

இஸ்லாம் ஒரு அறிவுக் கருவூலமாக திகழ்ந்தது. இதன் காரணமாக போப் ஒருவர் பாக்தாத் மற்றும் ஸ்பெயின் நூலகத்துக்கு வருகை தந்து தனது அறிவுப் பசியைப் போக்கிக் கொண்டார். வில்லியம் என்பவர் பெருமானாரின் கருத்துக்களான கற்பவராக இரு, கற்றுக் கொடுப்பவராக இரு, கற்பவருக்கு உதவுவராக இரு போன்றவற்றை கேட்டு மெய்ச்சிலிர்த்தார்.

இன்று அமெரிக்க வணிகத்திற்கு அச்சுறுத்தலாகத் திகழும் சீனர்கள் அக்காலத்தில் பெருமானாரைச் சந்தித்து தங்களது கலைப் பொருட்களை வழங்கினர். அவர்களது ஞானத்தை அறிந்த நபியவர்கள் ‘சீனம் சென்றேனும் சீர் கல்வி தேடு’ என்ற கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

ஆண்,பெண்களுக்கு கல்வியைக் கட்டாயமாக்கிய மார்க்கம் இஸ்லாம். பெண்களுக்காக கீழக்கரை தாசிம் பீவி, மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா, காயல்பட்டணம் வாவு வஜீஹா, திருச்சி அய்மான் உள்ளிட்ட கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வில்லியம் ஊரே திருக்குர்ஆன் ஒரு அப்பழுக்கற்ற வேதம் என்கிறார். காயல் நகரில் பயிலும் மாணவர்கள் படிக்கும்போதே திருக்குர்ஆனை மனனம் செய்து கல்லூரியில் ரமளானில் தொழுகை நடத்துகின்றனர். இதன் காரணமாக பல்வேறு உயர்நிலையை அடைகின்றனர்.

இஸ்லாம் கணிதம், மருத்துவம் உள்ளிட்ட அறிவுலகத்திற்கு முன்னோடியாக விளங்கியுள்ளது வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வர். காந்திஜி அவர்கள் அறிமுகப்படுத்திய கதராடைக்கு முன்னோடி இஸ்லாமிய மார்க்கம். இப்படி இஸ்லாத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் உள்ள தொடர்பு பிரிக்க முடியாத ஒன்று என்று கூறினார்.

நிகழ்ச்சியினை முஹம்மது மஹ்ரூப் தொகுத்து வழங்கினார். கபூர் சாஹிப் 'மதி நா' என்னும் மாத இதழை நடத்தி வந்தவர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.