Thursday, May 9, 2013

வாழ்வளித்த வள்ளல்


Thursday, May 9, 2013

வாழ்வளித்த வள்ளல்

வாழ்வளித்த வள்ளல் பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்..,

அராபிய நாட்டில் தோன்றி
ஆண்டவன் ஒருவ னென்னும்
மரபினை வாழச் செய்த
முஹம்மது நபியே போற்றி !”

என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள் வள்ளல் பெருமானாரவர்கள் பிறந்த நாள் தன்னிகரில்லாத் தனிப்பெருஞ் சிறப்புகளை கொண்டது. மக்களுக்காக மக்கள் எடுக்கும் விழாக்களிலே மாண்பு மிக்கதாயமைந்தது; பாலைகளிலும், சோலைகளிலும், பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும், தீவுகளிலும் கனிவுடன் கொண்டாடப்படுவது.

ஆடுகளை மேய்ப்பவராக வாழ்ந்த ஒருவர், அகிலத்தைக் கவர்ந்தவராகத் திகழ்ந்ததும், அனாதையாக வாழ்ந்த ஒருவர், ஒழுக்கத்தின் முகட்டினை அடைந்ததும் எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் அறிவின் ஆழ்கடலாக மிளிர்ந்ததும் உலகப் புதுமைகளாக அமைகின்றன. உலகின் ஒரு பெரும் பகுதியினரிடை அனைத்துத் துறைகட்கும் வழிகாட்டுகின்ற அருஞ்சிறப்பை அண்ணலாரவர்கள் அடைந்துள்ளார்கள்.

மிக மென்மையான வழிகளில் வானுயர்ந்த குறிக்கோளை எட்டிப்பிடித்து வாழ்ந்த காலத்திலேயே நிலையான வெற்றியைக் கண்டு நிறைவடைந்த பெருமையையும் பெற்றுள்ளார்கள். மனிதனின் தனி வாழ்வும், பொது வாழ்வும், பொருள் வாழ்வும், அருள் வாழ்வும், அரசியல் வாழ்வும், ஆத்மீக வாழ்வும் அவர்களால் அருமையும் பெருமையும் அடைந்தன. அவர்கள் வாழ்வில் வாய்த்த இறையருளும் பட்டறிவுகளும் தொட்ட துறைகளையெல்லாம் துலங்கச் செய்தன. சீரிய நபியின், தேசிய வாழ்வும் கூரிய உரைகளும், அறிவரங்கத்தில் ஒரு தனிப்பெருந் துறையாகவே அமைந்துவிட்டன. நாயகமவர்கள் எவ்வாறு நடந்தார்கள். அமர்ந்தார்கள். உரையாடினார்கள். உடையணிந்தார்கள்.
உணவருந்தினார்கள். உறங்கினார்கள்.

அவர்களின் கண்ணும் புருவமும் காது மூக்கும் எவ்வாறிருந்தன. அவர்களின் தாடியில் எத்தனை நரைமுடிகள் இருந்தன என்பன போன்றவற்றைக் கூட நாயகத் தோழர்கள் நுட்பமாக நோக்கி நுவன்றுள்ளனர். பின்னவர்களும் அவற்றைப் பொன்னே போல் போற்றி ஏடுகளில் பொறித்து வைத்துள்ளனர். வரலாற்றுச் சுடர் பட்டுத் தெளிவாக அமைந்த அண்ணலார் அவர்களின் வாழ்வையும் வாக்கையும் ஆய்ந்து நோக்கிய அறிஞர்களின் தொகையும், நூல்களின் எண்ணிக்கையும் பத்து நூறாயிரமாகப் பல்கிப் பெருகியுள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்த பேரரறிஞர்கள் வாழ்வுக்கு வகுத்த இலக்கணங்கள், பெருமானார் வாழ்விலே பொருந்தியிருப்பது அறிஞர் சிந்தையைக் கவர்வதாக அமைந்துள்ளது.

தீந்தமிழ்மேதை திருவள்ளுவர் கண்ட வாழ்க்கை இலக்கணத்திற்கு அறபகத்து அண்ணலார் வாழ்வு அரிய இலக்கியமாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகத் தொடக்கம் முதல் மதியில் மதிபெருகும் இந்நாள்வரை வாழ்ந்து மறைந்த அறிஞர் அறிவுரைகளின் அடிப்படையனைத்தும் பெருமானார் வாழ்விலும் வாக்கிலும் செறிந்திருக்க கண்டு மகிழ்கிறோம்.

வரலாறு கண்ட வீரர்கள் வையகத்து மேதைகள், வாழ்வுநெறி வகுத்த தூதர்கள், ஆகியோர் தம் பேரியல்புகளின்பெரும் பண்புகளின்பிணைப்பாகப் பெருமானார் அவர்களின் பெருவாழ்வு அமைந்திருந்ததெனலாம். இப்ராஹிம் நபியின் உறுதியை, மூஸா நபியின் வீரத்தை, ஈஸா நபியின் மென்மையை, யூசுப் நபியின் எழிலை, ஐயூப் நபியின் பொறுமையை, ஓரிடத்துக் கண்டு மகிழ்வதற்குப் பாரிடத்துப் பெருமானார் அவர்களையே நாட வேண்டியுள்ளது. அலெக்சாந்தரின் அஞ்சாமையையும், சீசரின் ஆண்மையையும், நெப்போலியனின் நெஞ்சுரத்தையும், மார்க்கஸ் அரிலியசின் தத்துவங்களையும் ஆய்ந்து பார்ப்போர் அண்ணல் பெருமானார் அவர்களின் அருமையை உணராமலிருக்க முடியாது.

ஒரு சீரிய புதல்வராக, நேரிய தோழராக, சிறந்த கணவராக, நிறைந்த தந்தையாக, நம்பிக்கைக்குரிய இளைஞராக, அஞ்சாத தளபதியாக, ஆற்றல் சான்ற ஆட்சியாளராக, போற்றுவதற்குரிய ஆத்மஞானியாக, அறநெறி வழுவா தவத்துறை வேந்தராக, நடுநிலை தவறா நீதிபதியாக, சான்றோர்க்கரிய சான்றோராக அண்ணலார் அவர்கள் தம் தலைமைக்குரிய தகுதியினை நன்கு விளக்கிக் காட்டுகின்றான்.

அனைத்துலக அருட்கொடையாக அருளாளன் அனுப்பிய அண்ணலார்அவர்கள் அழகிய முன்மாதிரியாகஉயர்வு பெற்றார்கள். மனிதன் காடுமேடேறுகின்ற காளைப் பருவத்தில்அல் அமீன்” (நம்பிக்கைக்குரியவர்) என்னும் நற்பட்டம் பெற்றார்கள். கடைத்தெருவுக்கு செல்லும் போது அண்டை அயலார் தேவைகளைக் கேட்டறிந்து ஆவன செய்தார்கள்; வாழ்வில் மூன்று நாட்கள் தொடர்ந்து வயிறார உண்டறியார்கள்; பசியைத் தணிப்பதற்காக வயிற்றில் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டு பருங்கயிற்றுக் கட்டிலின் மேல் பசுமேனி கோவடையப் படுத்திருந்தார்கள். பள்ளிவாயில் கட்டும்போது வீட்டில் கல் சுமந்தார்கள். துணைவியர்க்கு துணை புரிந்தார்கள்; பால் கறந்தார்கள்; கந்தைகளைத் தைத்தார்கள்; செருப்பை செம்மையாக்கினார்கள்; வழிப்போக்க உணவருந்திவிட்டுப் படுக்கையில் கழி மலத்தைக் கை மலரால் கழுவினார்கள்; பெருநாளின் போது தெருவில் நின்று தேம்பியழுத அனைத்துச் சிறுவனை அணைத்தெடுத்து ஆடைகளால் அலங்கரித்துத் துயர் தீர்த்தார்கள்; மலைமுழையில் மறைந்திருந்த போர் வீரர் பக்கத்தில் பகைவரின் அடியோனை கேட்டும் கலங்காதிருந்தார்கள்; போர் களத்தில் தன் பெயரை எடுத்துரைத்தும் பகைவரை அறைகூவி அழைத்தார்கள்; வாழ்வுப்பாதையில் குவிந்து கிடந்த குப்பைகளையகற்றுவதையே குறிக்கோளாக கொண்ட தங்கள் தலையில் குப்பையை கொட்டுவதையே குறியாகக் கொண்ட பெண்ணொருத்தி நோய்வாய்ப்பட்டபோது பரிந்திறைஞ்சினார்கள்; ஒப்பற்ற வெற்றி வீரராக மக்காவுக்குள் நுழைந்தபோது தம்மைக் கருணையின் நபியென நவின்றார்கள்; அடக்கத்தையும் பணிவையும் வெளிகாட்டினார்கள்; பழிக்குப் பழி வாங்குவதைப் பண்பாகக் கருதிய நாட்டில் தம்மைக் கல்லாலும் சொல்லாலும் அடித்த கயவர்களைஈரர்கொழந்துகளை இரக்கமின்றிக்கொன்ற கொடியோரைமன்னித்து அவர்கட்கு அடைக்கலம் அருளினார்கள்.

இவ்வாறாக, அன்பு, நாண், ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மை, ஊக்கம், உறுதி, பொறுமை, வீரம், பணிவு, எளிமை, தன்மானம், தன்னடக்கம், அஞ்சாமை போன்ற பொற்குணங்களின் பொற்குடமாய் திகழ்ந்த திரு நபியவர்கள், வளமார் வாழ்க்கைத் திட்டங்கள் வகுத்தமைக்கு திறமார் தேனுரைகளைத் தெளிவாக வழங்கியுள்ளார்கள். “இறையொருவன், பிறப்பில்லான், இறப்பில்லான், துணையில்லான், இணையில்லான் என்று நவின்றார்கள். வாழ்வுக்குத் துணிவூட்டச் சொன்னார்கள். வறியோரின் பசிப்பிணியை வல்லோரும் அறிவதற்கு நெறியான நோன்பினை அமைத்தார்கள் செல்வத்தின் செழிப்புடையோர் சேர் பொருளில் நாற்பதிலொன்று இல்லார்க்கு பகிர்ந்தளிக்க இயம்பினார்கள். வசதிகளைப் பெற்றிருப்போர் வாழ்நாளில் ஒரு முறையேனும் வான்புகழ் மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளச் சொன்னார்கள். “எவர் நாவால் கைகளினால் எழிலுறுமோ மனிதகுலம் அவர் நிறைந்த முஸ்லிம்என மொழிந்தார்.

வியர்வையது உலருமுன்னர் வேலை செய்வோர் கூலியினை நயமாகக் கொடுப்பதற்குநவின்றார்கள். “துன்புறுவோர் மனப்பிணியைத் துடைப்பதற்காக உதிர்க்கின்ற இன்சொல்லும் பெருங்கொடையெனப் பகர்ந்தார்கள். “சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுகவெனத் தேனான வாய் திறந்து தெளிவூட்டினார்கள். இஸ்லாத்தில் துறவறமில்லை யென்றும் திருமணம் செய்வது தம்வழியென்றும் பகர்ந்து இல்லறத்திற்குச் சிறப்பளித்தார்கள்.


எல்லா நாடுகளுக்கும், எல்லா காலங்களுக்கும், எல்லா இனங்களுக்கும் இறைவன் தன் அருள் தூதர்களை அனுப்பியுள்ளானென்றுரைத்துப் பிற மதத் தலைவர்கட்கும் புகழாரம் சூட்டி, மத ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்தார்கள். இறைதூதராய்த் தாமிருப்பினும், இயல்புகளில் மனிதரேயென்பதை தெளிவுபடுத்தினார்கள். இத்தகைய கருத்துக் கருவூலங்கள் ஆயிரமாயிரம் அண்ணல் நபியின் அறவுரைகளிலே அமைந்துள்ளன. அவ்வுரைகளை ஆர்வத்துடன் மேற்கொண்ட அருமைத்தோழர்களும் அன்பு நெறியாளர்களும் பெருமானார் அவர்கள் மீது பேரன்பைப் பொழிந்து பெருவாழ்வு வாழ்ந்தனர். வானகம் போற்றும் வையகப் பேரொளியை வாழ்த்தி நாமும் நலம் பெறுவோம்; பொலிவூட்டும் பொன்மொழிகளைச் செயலிற் காட்டிச் சிறப்படைவோம்.

No comments:

Post a Comment