Tuesday, January 19, 2016

மனதில் நின்ற மாமணி


[பேராசிரியர் இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர் அவர்கள் மறைந்த தினமான ஜனவரி 11-ஆம் தேதியன்று எழுதிய கட்டுரை இது]  

இந்த மண்ணை விட்டுப் போகையில் சடலமாகப் போகின்றவர் பலர். சரித்திரமாகிப் போகின்றவர் ஒரு சிலர். வரலாறு சமைப்பது கருவாடு சமைப்பது போலன்று.

வாழ்வாங்கு வாழ்ந்த பின்னும் வாடாத மலராய் நம் உள்ளத்தில் மணம் வீச வேண்டும். ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’. பிறந்த பயனை பிறரறியச் செய்ய வேண்டும்.

தமிழ் எப்போது பிறந்தது எனக்குத் தெரியாது. தமிழ் எங்கு பிறந்தது அதுவும் எனக்குத் தெரியாது. நானறியேன். ஆனால் தமிழ் தவழ்ந்ததை நான் கண்டிருக்கிறேன், என் தமிழாசான் “இறையருட் கவிமணியின் நாவில் எங்ஙனம் தவழ்ந்து விளையாடும்; எப்படியெல்லாம் புரண்டு விளையாடும் என நானறிவேன். இந்த தமிழ்ப் பாவாணர் எனக்கு தமிழ்ப்பா ஆனவர்.

அந்த நாவுக்கரசரின் நறுமணம் கமழும் நற்றமிழ் மழையில் நாள்முழுதும் நனைவது நலம்பயக்கும் ஆனந்தம்; நயம்பூக்கும் அனுபவம். இந்த எழுதுகோல் ஓவியரிடம் இலக்கியம் பயில்வது எழும்பிவரும் கடலலையில் இரண்டு கால்களையும் நனைக்கையில் ஏற்படும் நயாகரா அதிசயம். இந்த பன்மொழிப் புலவரின் பன்னீர் தெளிக்கும் பைந்தமிழை பருகுவது பேரின்பம்.

இறையருட் கவிமணி!
இதயத்தின் ஒளிமணி!
 சொல்லும் செயலும்விரலும் ரேகையுமாய்விளங்கிய வித்தகர்!
 நாக்குத் திரியில்மறைச் சுடரேந்திதீனெறி காட்டிய மனித விளக்கு

என்று இவரை கவிபாடி களிப்புறுகிறார் கவிஞர் கஃபூர் தாசன்.

கடல் மடையின் திறப்பா அல்லது காட்டாற்று வெள்ளமா என கருத்தியம்பக் குழம்பும் கன்னித்தமிழுப் பேச்சு அவர் பேச்சு. தென்குமரி திருவையின் தேன்சிந்தும் தெவிட்டா தமிழ் அவரது தமிழ்.

பைந்தமிழ் வளர்த்த இவரது பண்ணையில் நானும் மேய்ந்தேன் என்பது நான் அடைந்த பாக்கியம். அவரது கூரிய சொற்களும் சீரிய சொற்களும் வீரிய விதைகளாய் என்னுள் விதைந்தன. இளம்பிறை பள்ளியை வளர்பிறையாய் ஆக்கிய முத்தமிழ் முழுமதி அந்த அறிவுமதி.

1973-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மீலாது விழா கவியரங்கத்தில் நம் பேராசிரியர் தலைமையேற்று பங்கேற்கிறார்..

ஒற்றை வரியில் தான் பணிபுரிந்த அனைத்து கல்லூரிகளையும் குறிப்பிட்டு ஒரு தன்னிலை விளக்கத்தை தருகிறார். அது அவரால் மட்டுமே முடியும்.

“பாடியதில் நடுநகரில் பாளையத்தில் பட்டினத்தில்படிவிட்டுப் பட்டிருக்கும் பறவையென அழைத்துவந்தேபாட்டரங்கில் மாட்டிவிட்டீர் பாப்புனையத் தூண்டிவிட்டீர்”

[பாடி – வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி
நடுநகர் – திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி
பாளையம் – உத்தம்பாலையம் ஹாகி கருத்த ராவுத்தர் கல்லூரி
பட்டினம் – அதிராம்பட்டினம் காதி முகைதீன் கல்லூரி]

தபலா அதிர்வு போலத்தாளம் பிசகாக் கதியில்சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்சந்தனம் கமழச் செய்வார் –

என்று பொருத்தமாகப் பாடுவார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்

அருவிதாங் கேட்டாலும் அழகுயாழ் குழலென்னும்கருவிதாங் கேட்டாலும் கானவானம் பாடிக்குருவிதாங் கேட்டாலும் கூடிவந்து பாராட்டும்திருவிதாங் கோட்டுச் செழும் புலவ!

1973-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த முதல் இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இறையருட் கவிமணியை புகழ்ந்து கவிக்கோ அப்துல் ரகுமான் பாடிய வரிகள் இவை

திகழும் அவர் கவிதையில் தேமா, புளிமா!
ஆனால் அப்துல் கபூரோஆமா எவர்க்கும் போடாத அரிமா!

இது கவிஞர் மு.மேத்தாவின் புகாழாரம்

இருவரிகளைக் கொண்டு இலக்கியம் படைத்த திருவள்ளுவரைப் போல சின்னச் சின்ன வார்த்தைகளைக் கோர்த்து பாமாலை கோர்க்கும் பூமாலை சூத்திரர்.

பேராசிரியர் கா.அப்துல் கபூர் அவர்களின் தமிழறிவுக்கு இதோ ஒரு சிறிய எடுத்துக்காட்டு.

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்”

என்ற .வள்ளுவரின் குறளுக்கு பரிமேலழகர், மு.வரதராசனார், மணக்குடவர், கலைஞர் கருணாநிதி, சாலமன் பாப்பையா போன்ற அனைத்து அறிஞர்களும்  “குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்” என்ற பொருளில் தான் அருஞ்சொற்பொருள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

இதற்கு நேர்மறையான விளக்கத்தைக் கூறி எங்களையெல்லாம் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தவர் அவர். “பொய்மையும் வாய்மை இடத்த” என்பதற்கு குற்றமிலா நன்மை ஏற்படின் பொய்யைக் கூட உண்மையின் இடத்திலும் பார்க்கலாம் என்றாலும் பொய்மையானது வாய்மையின் “இடத்த”…..அதாவது இடப்பக்கமே இடம்பிடிக்கமுடியுமே தவிர வலப்பக்கத்தில் ஒருபோதும் இடம் பிடிக்கவே முடியாது” என்று விரிவுரை தந்து வியப்பிலாழ்த்தியவர். ஆம். அபாரமான சிந்தனை கொண்ட அற்புத ஆசிரியப் பெருந்தகை அவர்.

தமிழக கல்லூரி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி பேராசிரியராக பணி ஏற்றது கபூர் சாகிப்தான்.

உருது மொழியில் நடைபெறும் “முஷாயிரா” போன்று தமிழ்மொழியில் “கவியரங்கம்” என்ற பெயரில் இன்று நாடெங்கும் நடைபெறும் வழக்கத்தை வாணியம்பாடியில் முதன் முதலில் அறிமுகம் செய்த பெருமையும் அவர்களைத்தான் சாரும்.

தமிழில் உரை அலங்காரத்திற்கும், நடை அலங்காரத்திற்கும் புகழ் பெற்றவர் அறிஞர் அண்ணா. பேராசிரியர் அப்துல் கபூர் எழுதிய ‘இலக்கியம் ஈந்த தமிழ்’என்ற நூலின் முதற்கட்டுரையை அதில் காணப்பட்ட செந்தமிழ் நடைக்குவேண்டி தன் “திராவிட நாடு” பத்திரிக்கையில் வெளியிட்டு பாராட்டி மகிழ்ந்தார்.

“இவர் போன்ற நாவன்மை மிக்க நற்றமிழ் வல்லார் நம் கழகத்திற்கு கிடைப்பாரெனில் அதன் பொலிவும் வலுவும் மென்மேலும் சிறந்தோங்கும்” என்று அறிஞர் அண்ணா வியந்த பேரறிவாளர்.

வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியைல் தமிழ் மன்றத்தின் சார்பில் நடந்த வரவேறு நிகழ்ச்சியில் நம் பேராசிரியரின் இரயைக் கெட்டு விட்டு “தன் சிந்தனையோட்டத்தில் முகிழ்ந்தெழும் அரிய கருத்துக்களை, தீந்தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கோர்த்து, தனக்கே உரிய பாணியில் முழ்க்கம் செய்து வருபவர் நண்பர் கபூர் அவர்கள்” என்று புகாழாரம் சூட்டினார்.

நாஞ்சில் நாடு முன்னர் ஓர் அதங்கோட்டாசானை நல்கியது போல், இன்றும் திருவிதாங்கோடு தந்த அதங்கோட்டாசான்

தமிழே என்னும் சொற்கொண்டுதாயே ஊட்டிய கற்கண்டு

என்று பாடி தமிழின் பெருமையை நமக்கு புரிய வைத்தவர் அவர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நாவலர் இரா. நெடுஞ்செழியன், பேராசிரியர் க. அன்பழகன், மதியழகன் ஆகியோருடன் ஏற்பட்ட நெருக்கம் பிற்காலத்தில் ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’ என்று  தமிழ் மறுமலர்ச்சி பூண்டபோது அவர்களை நாடறிந்த நற்றமிழ் பேச்சாளராக தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அடையாளம் காண்பித்தது. கழகத் தலைவர்களில் ஒருவரான சாதிக்பாட்சா பேராசிரியரின் மாணவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

“செந்தமிழுக்கு ஒரு சேதுப்பிள்ளை” என்பதைப்போல் “அழகுத் தமிழுக்கு ஓர் அப்துல் கபூர்” என்று பேராசிரியரின் பெருமையை பறைசாற்றுவோர் உண்டு.

ஒருமுறை “கவிஞராக” என்ற ஒரு நூலை எனக்கு அவர்கள் பரிசளித்து மரபுக்கவிதை எழுத ஊக்குவித்தார்கள்.  கவிதை வரிகளைக் கொடுத்து ‘நேரசை’ ‘நிறையசை’ பிரிப்பது எவ்வாறு, ‘தேமா’, ‘புளிமா’ எங்ஙனம் கண்டறிவது என்று பயிற்சி அளிப்பார்கள்.

 பேராசிரியரின் சந்தம் கமழும் பேச்சும், எழுத்தும் என்னுள் தமிழார்வத்தை மென்மேலும் தூண்டி விட்டது. கவிஞர் கண்ணதாசனின் தலைமையில் கவியரங்கம் ஒன்றினை எங்கள் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தனர். ‘அழுகை’ என்ற தலைப்பில்“மலையழுதால் நதியாகும்; மனமழுதால் கவியாகும்” என்று தொடங்கி “ஈன்ற பொழுதில் தாயழுத கண்ணீரே நாமாகும்”என்று முடிவுறும் என் கவிதையை கவியரசும், பேராசிரியரும் வெகுவாக ரசித்து பாராட்டினார்கள்.

ஒரு நோன்பு பெருநாளின்போது அவர்கள் எனக்கு அனுப்பியிருந்த மடலொன்றை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். உள்நாட்டு அஞ்சலில், மூன்றே மூன்று வரிகளில் கச்சிதமாக தட்டெச்சு செய்யப்பட்ட வாழ்த்து அது:

ஈகைத் திருநாள்இன்பம் தருக;
இறையருள் பொழிக !

அந்த காவிய நாயகனின் நினைவுகள் அலைமோதும் போதெல்லாம் இந்த அஞ்சல் வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பேன். நிறைவான வாழ்வை வாழ்ந்து இறைவனடிச் சேர்ந்த ஆசானின் நினைவுகளில் என் கண்கள் குளமாகிப் போகும்.

அன்னார் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் ஆகின்றன. அருந்தமிழ் ஆர்வலர்கள் இன்றளவும் அவரை நினைவு கூறுகின்றனர்.  இஸ்லாமிய சமுதாயம் அவரது இலக்கிய பணியையும், ஆன்மீகச் சேவையையும் நேஆளும் எண்ணிப் பார்க்கின்றனர். அவரது இழப்பு தமிக்கூறும் நல்லுலகிற்கு ஈடு இணையில்லாத பேரிழப்பு.



– அப்துல் கையூம்

Thursday, May 9, 2013

வாழ்வளித்த வள்ளல்


Thursday, May 9, 2013

வாழ்வளித்த வள்ளல்

வாழ்வளித்த வள்ளல் பேராசிரியர். கா. அப்துல் கபூர் எம்.ஏ.,

“அராபிய நாட்டில் தோன்றி
ஆண்டவன் ஒருவ னென்னும்
மரபினை வாழச் செய்த
முஹம்மது நபியே போற்றி !”

என்பதாக அருமைத் தமிழ் தென்றல் அகமுவந்து பாராட்டிய அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவனியில் தோன்றிய நன்னாள் வள்ளல் பெருமானாரவர்கள் பிறந்த நாள் தன்னிகரில்லாத் தனிப்பெருஞ் சிறப்புகளை கொண்டது. மக்களுக்காக மக்கள் எடுக்கும் விழாக்களிலே மாண்பு மிக்கதாயமைந்தது; பாலைகளிலும், சோலைகளிலும், பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும், தீவுகளிலும் கனிவுடன் கொண்டாடப்படுவது.

ஆடுகளை மேய்ப்பவராக வாழ்ந்த ஒருவர், அகிலத்தைக் கவர்ந்தவராகத் திகழ்ந்ததும், அனாதையாக வாழ்ந்த ஒருவர், ஒழுக்கத்தின் முகட்டினை அடைந்ததும் எழுதப்படிக்கத் தெரியாத ஒருவர் அறிவின் ஆழ்கடலாக மிளிர்ந்ததும் உலகப் புதுமைகளாக அமைகின்றன. உலகின் ஒரு பெரும் பகுதியினரிடை அனைத்துத் துறைகட்கும் வழிகாட்டுகின்ற அருஞ்சிறப்பை அண்ணலாரவர்கள் அடைந்துள்ளார்கள்.

மிக மென்மையான வழிகளில் வானுயர்ந்த குறிக்கோளை எட்டிப்பிடித்து வாழ்ந்த காலத்திலேயே நிலையான வெற்றியைக் கண்டு நிறைவடைந்த பெருமையையும் பெற்றுள்ளார்கள். மனிதனின் தனி வாழ்வும், பொது வாழ்வும், பொருள் வாழ்வும், அருள் வாழ்வும், அரசியல் வாழ்வும், ஆத்மீக வாழ்வும் அவர்களால் அருமையும் பெருமையும் அடைந்தன. அவர்கள் வாழ்வில் வாய்த்த இறையருளும் பட்டறிவுகளும் தொட்ட துறைகளையெல்லாம் துலங்கச் செய்தன. சீரிய நபியின், தேசிய வாழ்வும் கூரிய உரைகளும், அறிவரங்கத்தில் ஒரு தனிப்பெருந் துறையாகவே அமைந்துவிட்டன. நாயகமவர்கள் எவ்வாறு நடந்தார்கள். அமர்ந்தார்கள். உரையாடினார்கள். உடையணிந்தார்கள்.
உணவருந்தினார்கள். உறங்கினார்கள்.

அவர்களின் கண்ணும் புருவமும் காது மூக்கும் எவ்வாறிருந்தன. அவர்களின் தாடியில் எத்தனை நரைமுடிகள் இருந்தன என்பன போன்றவற்றைக் கூட நாயகத் தோழர்கள் நுட்பமாக நோக்கி நுவன்றுள்ளனர். பின்னவர்களும் அவற்றைப் பொன்னே போல் போற்றி ஏடுகளில் பொறித்து வைத்துள்ளனர். வரலாற்றுச் சுடர் பட்டுத் தெளிவாக அமைந்த அண்ணலார் அவர்களின் வாழ்வையும் வாக்கையும் ஆய்ந்து நோக்கிய அறிஞர்களின் தொகையும், நூல்களின் எண்ணிக்கையும் பத்து நூறாயிரமாகப் பல்கிப் பெருகியுள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் வாழ்ந்த பேரரறிஞர்கள் வாழ்வுக்கு வகுத்த இலக்கணங்கள், பெருமானார் வாழ்விலே பொருந்தியிருப்பது அறிஞர் சிந்தையைக் கவர்வதாக அமைந்துள்ளது.

தீந்தமிழ்மேதை திருவள்ளுவர் கண்ட வாழ்க்கை இலக்கணத்திற்கு அறபகத்து அண்ணலார் வாழ்வு அரிய இலக்கியமாக அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகத் தொடக்கம் முதல் மதியில் மதிபெருகும் இந்நாள்வரை வாழ்ந்து மறைந்த அறிஞர் அறிவுரைகளின் அடிப்படையனைத்தும் பெருமானார் வாழ்விலும் வாக்கிலும் செறிந்திருக்க கண்டு மகிழ்கிறோம்.

வரலாறு கண்ட வீரர்கள் வையகத்து மேதைகள், வாழ்வுநெறி வகுத்த தூதர்கள், ஆகியோர் தம் பேரியல்புகளின் – பெரும் பண்புகளின் – பிணைப்பாகப் பெருமானார் அவர்களின் பெருவாழ்வு அமைந்திருந்ததெனலாம். இப்ராஹிம் நபியின் உறுதியை, மூஸா நபியின் வீரத்தை, ஈஸா நபியின் மென்மையை, யூசுப் நபியின் எழிலை, ஐயூப் நபியின் பொறுமையை, ஓரிடத்துக் கண்டு மகிழ்வதற்குப் பாரிடத்துப் பெருமானார் அவர்களையே நாட வேண்டியுள்ளது. அலெக்சாந்தரின் அஞ்சாமையையும், சீசரின் ஆண்மையையும், நெப்போலியனின் நெஞ்சுரத்தையும், மார்க்கஸ் அரிலியசின் தத்துவங்களையும் ஆய்ந்து பார்ப்போர் அண்ணல் பெருமானார் அவர்களின் அருமையை உணராமலிருக்க முடியாது.

ஒரு சீரிய புதல்வராக, நேரிய தோழராக, சிறந்த கணவராக, நிறைந்த தந்தையாக, நம்பிக்கைக்குரிய இளைஞராக, அஞ்சாத தளபதியாக, ஆற்றல் சான்ற ஆட்சியாளராக, போற்றுவதற்குரிய ஆத்மஞானியாக, அறநெறி வழுவா தவத்துறை வேந்தராக, நடுநிலை தவறா நீதிபதியாக, சான்றோர்க்கரிய சான்றோராக அண்ணலார் அவர்கள் தம் தலைமைக்குரிய தகுதியினை நன்கு விளக்கிக் காட்டுகின்றான்.

அனைத்துலக அருட்கொடையாக அருளாளன் அனுப்பிய அண்ணலார் “அவர்கள் அழகிய முன்மாதிரியாக” உயர்வு பெற்றார்கள். மனிதன் காடுமேடேறுகின்ற காளைப் பருவத்தில் “அல் அமீன்” (நம்பிக்கைக்குரியவர்) என்னும் நற்பட்டம் பெற்றார்கள். கடைத்தெருவுக்கு செல்லும் போது அண்டை அயலார் தேவைகளைக் கேட்டறிந்து ஆவன செய்தார்கள்; வாழ்வில் மூன்று நாட்கள் தொடர்ந்து வயிறார உண்டறியார்கள்; பசியைத் தணிப்பதற்காக வயிற்றில் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டு பருங்கயிற்றுக் கட்டிலின் மேல் பசுமேனி கோவடையப் படுத்திருந்தார்கள். பள்ளிவாயில் கட்டும்போது வீட்டில் கல் சுமந்தார்கள். துணைவியர்க்கு துணை புரிந்தார்கள்; பால் கறந்தார்கள்; கந்தைகளைத் தைத்தார்கள்; செருப்பை செம்மையாக்கினார்கள்; வழிப்போக்க உணவருந்திவிட்டுப் படுக்கையில் கழி மலத்தைக் கை மலரால் கழுவினார்கள்; பெருநாளின் போது தெருவில் நின்று தேம்பியழுத அனைத்துச் சிறுவனை அணைத்தெடுத்து ஆடைகளால் அலங்கரித்துத் துயர் தீர்த்தார்கள்; மலைமுழையில் மறைந்திருந்த போர் வீரர் பக்கத்தில் பகைவரின் அடியோனை கேட்டும் கலங்காதிருந்தார்கள்; போர் களத்தில் தன் பெயரை எடுத்துரைத்தும் பகைவரை அறைகூவி அழைத்தார்கள்; வாழ்வுப்பாதையில் குவிந்து கிடந்த குப்பைகளையகற்றுவதையே குறிக்கோளாக கொண்ட தங்கள் தலையில் குப்பையை கொட்டுவதையே குறியாகக் கொண்ட பெண்ணொருத்தி நோய்வாய்ப்பட்டபோது பரிந்திறைஞ்சினார்கள்; ஒப்பற்ற வெற்றி வீரராக மக்காவுக்குள் நுழைந்தபோது தம்மைக் கருணையின் நபியென நவின்றார்கள்; அடக்கத்தையும் பணிவையும் வெளிகாட்டினார்கள்; பழிக்குப் பழி வாங்குவதைப் பண்பாகக் கருதிய நாட்டில் தம்மைக் கல்லாலும் சொல்லாலும் அடித்த கயவர்களை – ஈரர்கொழந்துகளை இரக்கமின்றிக்கொன்ற கொடியோரை – மன்னித்து அவர்கட்கு அடைக்கலம் அருளினார்கள்.

இவ்வாறாக, அன்பு, நாண், ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மை, ஊக்கம், உறுதி, பொறுமை, வீரம், பணிவு, எளிமை, தன்மானம், தன்னடக்கம், அஞ்சாமை போன்ற பொற்குணங்களின் பொற்குடமாய் திகழ்ந்த திரு நபியவர்கள், வளமார் வாழ்க்கைத் திட்டங்கள் வகுத்தமைக்கு திறமார் தேனுரைகளைத் தெளிவாக வழங்கியுள்ளார்கள். “இறையொருவன், பிறப்பில்லான், இறப்பில்லான், துணையில்லான், இணையில்லான் என்று நவின்றார்கள். வாழ்வுக்குத் துணிவூட்டச் சொன்னார்கள். வறியோரின் பசிப்பிணியை வல்லோரும் அறிவதற்கு நெறியான நோன்பினை அமைத்தார்கள் செல்வத்தின் செழிப்புடையோர் சேர் பொருளில் நாற்பதிலொன்று இல்லார்க்கு பகிர்ந்தளிக்க இயம்பினார்கள். வசதிகளைப் பெற்றிருப்போர் வாழ்நாளில் ஒரு முறையேனும் வான்புகழ் மக்காவுக்குப் புனிதப் பயணம் மேற்கொள்ளச் சொன்னார்கள். “எவர் நாவால் கைகளினால் எழிலுறுமோ மனிதகுலம் அவர் நிறைந்த முஸ்லிம்” என மொழிந்தார்.

‘வியர்வையது உலருமுன்னர் வேலை செய்வோர் கூலியினை நயமாகக் கொடுப்பதற்கு’ நவின்றார்கள். “துன்புறுவோர் மனப்பிணியைத் துடைப்பதற்காக உதிர்க்கின்ற இன்சொல்லும் பெருங்கொடை” யெனப் பகர்ந்தார்கள். “சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெறுக” வெனத் தேனான வாய் திறந்து தெளிவூட்டினார்கள். இஸ்லாத்தில் துறவறமில்லை யென்றும் திருமணம் செய்வது தம்வழியென்றும் பகர்ந்து இல்லறத்திற்குச் சிறப்பளித்தார்கள்.


“எல்லா நாடுகளுக்கும், எல்லா காலங்களுக்கும், எல்லா இனங்களுக்கும் இறைவன் தன் அருள் தூதர்களை அனுப்பியுள்ளானென்றுரைத்துப் பிற மதத் தலைவர்கட்கும் புகழாரம் சூட்டி, மத ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்தார்கள். இறைதூதராய்த் தாமிருப்பினும், இயல்புகளில் மனிதரேயென்பதை தெளிவுபடுத்தினார்கள். இத்தகைய கருத்துக் கருவூலங்கள் ஆயிரமாயிரம் அண்ணல் நபியின் அறவுரைகளிலே அமைந்துள்ளன. அவ்வுரைகளை ஆர்வத்துடன் மேற்கொண்ட அருமைத்தோழர்களும் அன்பு நெறியாளர்களும் பெருமானார் அவர்கள் மீது பேரன்பைப் பொழிந்து பெருவாழ்வு வாழ்ந்தனர். வானகம் போற்றும் வையகப் பேரொளியை வாழ்த்தி நாமும் நலம் பெறுவோம்; பொலிவூட்டும் பொன்மொழிகளைச் செயலிற் காட்டிச் சிறப்படைவோம்.

Thursday, October 1, 2009

ஷேக்ஸ்பியர்



இறையருட் கவிமணி அவர்கள் தமிழில் எந்த அளவு புலமைப் பெற்று இருந்தார்களோ அதே அளவு ஆங்கிலம், மலையாளம், அரபி மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஷேக்ஸ்பியரின் வரிகளை அழகுத் தமிழில் அவர்கள் மொழிபெயர்த்திருக்கும் பாங்கு நம்மை மகிழ்விக்கும்.

“But man; proud man
Drest in a little brief authority
Most ignorant of what he is assured,
His glossy essence, like an angry ape;
Plays such fantastic tricks before High Heavens
As makes the angels weep”


- Shakespeare

“மானிடனே ! செருக்குற்ற மானிடனே உனக்காக
வானிடமே வாக்களித்த வாய்ப்புகளை உணராமல்,
அற்ப அதிகாரத்தால் ஆணவமே மிகப்பெற்று
வெறி கொண்ட மற்கடம் போல் வேடமிட்டுத் துள்ளுகிறாய்;
கோனிடமே விசித்திரமாய்ச் சூழ்ச்சிகளை யாடுகின்றாய்;
வானவரோ விளைவுணர்ந்து விம்மி விம்மி அழுகின்றார்”

- இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர்.

Friday, September 25, 2009

முத்தமிழ் வளர்ச்சியில் ..

கவிமணி பேரா . கா. அப்துல் கபூர் அவர்கள் தமிழக அரசின் பொற்கிழி விருது பெற்றவர் . இவரின் "மிக்க மேலானவன்" புத்தகம் இறைமறையின்

87ஆவது அத்தியாயத்தின் விளக்கவுரை போல் அமைந்ததாகும்." ஞானப்புகழ்ச்சி ஓர் ஆய்வு" எனும் புத்தகம் தக்கலை பீரப்பா அவர்களின் பாடலை இவர் ஆய்வு செய்து எழுதியது .

இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல், தீன்வழிச் செம்மல், நபிவழிச் செல்வர் , கன்சுல் உலூம் (அறிவுக் களங்சியம்) ஆகிய கெளரவங்களைப் பெற்ற பேராசிரியர் கா. அப்துல் கஃபூர் எம். ஏ.,டி.லிட் அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். ஒரு தமிழ்ப் பேராசிரியரால் கல்லூரி முதல்வராகவும் பன்மொழிப்புலவராகவும், பன்னூல் ஆசிரியராகவும் கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும், தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் அரைநூற்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்குத் 'தமிழ்ச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவரது தமிழ்ப்புலமைக்குச் சான்றாக அமையும் அவரது 'அரும் பூ ' என்னும் குழந்தைப்பாடல் நூலினை ஆய்வு செய்தோர், பல்கலைக் கழகங்களில் ஆய்வுப் பட்டம் பெற்றுள்ளனர்.

'இனிக்கும் இறைமொழிகள்' என்னும் பெயரில் பேராசிரியர் அவர்கள் , திருக்குர் ஆன் வசனங்கள் சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ள ஆய்வுகள் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

இவையன்றி, கற்கண்டு சொற்கொண்டு உரையாற்றி உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடல் கடந்த நாடுகளிலும் முத்திரை பதித்த மூத்த தமிழரிஞர். இறையருள் பொழியும் கவிதைக் கொண்டல். அரும்பு உள்ளங்களுக்கும் கவிமழை தந்த கரும்புக் கவிஞர் இவர். பைந்தமிழ் நாட்டில் பாட்டரங்குகள் தோன்றக் காரணமான முன்னோடி. வாடாத மாலை இலக்கியங்கள் பலவற்றை வண்ணத் தமிழில் இயற்றிச் சிறந்த காலத்தின் கண்ணாடி. உரைநடைத் தமிழில் உயிரூட்டப் பாணியை ஆக்கி அழகு தமிழுக்கோர் அப்துல் கஃபூர் ' எனப் பல்கழைக் கழகத் தமிழ்த் துறை தலமைப் பேராசிரியராலேயே பாரட்டப் பட்டவர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி, அதிராமப்பட்டினம் காதிர் முஹைதீன் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர். தமது இளவல் பேரா. முஹம்மது பாரூக் அவர்களின் உறுதுணையோடு "மதி நா " (அறிவும் நாவும்) என்ற இதழைப்பல்லாண்டுகளாக நடத்தியவர்.

பேராசிரியர். முஹம்மது பாரூக் அவர்கள் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பேராசிரியர் மற்றும் சென்னை புதுக்கல்லூரியில் சிறப்புப் பேராசிரியர் .தமிழ் இலக்கியக் கூட்டங்கள் பலவற்றைத் தலைமையேற்று நடத்தியவர். தற்போதும் மலேசியா, சிங்கப்பூர் என ஒழிவின்றி, தமிழ் இலக்கிய மாநாடுகளில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தமிழ்த் தொண்டு செய்து வருபவர்.

நன்றி: நல்லடியார்/ எதிரொலி ஜூலை 2006