Thursday, January 8, 2009

நிறைவான வாழ்க்கை அவர் வாழ்க்கை

“கவிஞர்கள் பலரை நான் அறிவேன். சிருங்கார ரசனை ததும்ப அழகிய பெண்களின் அங்கங்களை வருணிப்பவர்கள் எத்தனை பேர்?

கைத்தட்டலுக்காகத் தம் கவிதைகளை அரங்கேற்றுபவர்கள் எத்தனைப் பேர்?

கற்பனைகள் தோன்றுவதற்காக மதுப்பிரியர்களாக மாறித் தள்ளாடியவர்கள் எத்தனைப்பேர்?

அரசியல்வாதிகளை அளவுக்கு மீறிப் புகழ்ந்து அவர்களுடைய அரவணைப்பில் பிரமுகர்களாகக் காட்சியளிப்பவர்கள் எத்தனைப்பேர்?

ஆனால் இத்தகைய மாசுகளும், தூசுகளும், தம் மீது படியாத மர்ஹூம் இறையருட் கவிமணி அவர்களை எப்படி மறக்க முடியும்?”

என்ற சிந்திக்க வைக்கக் கூடிய வினாவை நம் முன் வைக்கின்றார் உத்தம பாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கெளதிய்யாக் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எஸ்.ஏ.செய்யது அப்துல்லாஹ் அவர்கள்.

“தோன்றிற் புகழொடு தொன்றுக – அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று”

என்று பகர்வார் ஐயன் திருவள்ளுவர்.

மக்கள் நிறைந்த சபையில் - கற்றவர் நிறைந்த சபையில்... தோன்றுவீரேயானால் புகழொடு தோன்றுவீராக... இல்லையேல் தோன்றாமலிருப்பதே நன்று... என்று இதற்குப் பொருள்.

பிறந்த பிறப்புக்கு ஓர் அர்த்தம் வேண்டும். ஒரு குறிக்கோள் வேண்டும். நான் அவரிடம் மாணவனாக பயின்ற காலத்தில் சுவாமி விவேகானந்தரின் கீழ்க்கண்ட அறிவுரையை அவர் அடிக்கடி நினைவில் நிறுத்துவார்.

“எழுந்திரு !
இவ்வுலகோர் இயங்க உன் தோள் கொடுத்து உதவு.
எத்தனை நாட்களுக்கு இந்த வாழ்வு?
இவ்வுலகில் மனிதனாய்ப் பிறந்ததற்கு
ஏதேனும் ஒரு நினைவுச் சின்னத்தை விட்டுச் செல்லல் வேண்டும்.
இல்லையேல், உனக்கும், கல்லிற்கும். மண்ணிற்கும், மரத்திற்கும்,
என்னதான் வேற்றுமை?”

என்ற பொன்வாக்கிற்கு ஏற்றார்போல் பேராசிரியரின் வாழ்வு ஓர் அர்த்தமுள்ள சகாப்தமாகவே இருந்தது. ‘கண்டதே வாழ்க்கை, கொண்டதே கோலம்’ என்றில்லாமல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்கி இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்கள்.

“அப்துல் கபூரோ, ஆமா எவர்க்கும் போடாத அரிமா” என்று கவிஞர் மு.மேத்தா கூறுவதைப் போல் தலை நிமிர்ந்து வாழ்ந்த கம்பீரக் கவிக்குயில் நம் பேராசிரியர்.

அப்துல் கையூம்

திரு அரங்கநாதர்


கவிக்கோ அப்துல் ரகுமான்

“வெற்றி பல கண்டு நான்
விருது பெற வரும் போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்”

என்று கவிக்கோ அப்துல் ரகுமானைப் புகழ்ந்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி.

நாவன்மையும், அறிவுக் கூர்மையும் படைத்த கவிக்கோ அவர்கள் 1973-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதியன்று திருச்சியில் நடந்த முதல் இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மேடையில் இறையருட் கவிமணியை இவ்வாறு புகழ்ந்தார்.

அருவிதாங் கேட்டாலும் அழகுயாழ் குழலென்னும்
கருவிதாங் கேட்டாலும் கானவானம் பாடிக்
குருவிதாங் கேட்டாலும் கூடி வந்து பாராட்டும்
திருவிதாங் கோட்டுச் செழும் புலவ! புகழ்பூத்த
பிறைப் பள்ளிக் கூடத்தில் பிஞ்சுப் பிறைகளை
நிறைநிலாவாய் உருவாக்கும் நீலவான் கரத்தாரே!
பாவெல்லாம் பரமனுக்கே படையலிட்டுத் தமிழகத்தார்
நாவெல்லாம் நாயகத்தை நடமாட விட்டவரே!
இறையருட் கவிமணியே! இவ்வரங்க நாதரே!

போதனை

நற்பண்புகளை நறுக்குத் தெறித்தாற்போல் பிஞ்சு உள்ளங்களில் பதிய வைக்க ஆரம்ப பள்ளிகளில் ஆத்திசூடியை சின்னஞ் சிறார்களுக்கு அறிமுகப்படுத்தும் உத்தியை நாம் காணலாம்.

ஆத்திசூடி என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது ஒளவையார்தான். ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்பது போல் உயிரெழுத்து, மெய்யெழுத்துக்களை அகர வரிசையில் பச்சிளம் பிள்ளைகளின் உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் பதிய வைக்கவும், அறப்பண்புகளை அழுத்தமாக போதிக்கவும் ஆத்திசூடி உகந்தது.

ஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்து மாற்றுக் கருத்துக்களை உதித்தவன் நமது மீசைக் கவிஞன் பாரதி.

'தையல் சொல் கேளேல்"
என்று பாட்டி சொல்லி வைத்தாள்.
'தையலை உயர்வு செய்"
என்று எதிர் பாட்டு பாடி வைத்தான் பாரதி.

'ஆறுவது சினம்’ என்றாள் ஒளவை.
இவனோ 'ரௌத்திரம் பழகு’ என்றான். '

‘நுப் போல் வளை’ என்றாள் பாட்டி
'கிளை பல தாங்கேல்" என்றான்
பைந்தமிழ்த் தேனி.

‘தொன்மை மறவேல்’ என்றாள் ஒளவை.
'தொன்மைக் கஞ்சேல்" என்றான் பாரதி.

'போர்த் தொழில் புரியேல்’– இது ஒளவை.
'போர்த்தொழில் பழகு’- இது பாரதி .

'மீதூண் விரும்பேல்’ என்றாள் அவள்.
'ஊண் மிக விரும்பு’ என்றான் இவன்.

இவர்கள் இருவரும் கூறாத கருத்துக்களை இறையருட் கவிமணி அவர்கள் இனிமையுற போதிக்கும் பாங்கினை ‘மனைவிளக்கு’ நூலில் நாம் சுவைத்து மகிழலாம்.

‘இசைவைப் பெறாதயல் இல்லம் நுழையேல்’
‘தரையின் மீது தருக்குடன் நடவேல்’
‘குரலைத் தாழ்த்தி குணமுறப் பேசு’
‘தெரிந்ததைப் பேசு; தெளிவாய்ப் பேசு’
‘மெய்யால் இன்பம் ; பொய்யால் அழிவு’
‘பணிவு உயர்த்தும் ; பெருமை தாழ்த்தும்’


- அப்துல் கையூம்

கடலாய் விரிந்த மழைத்துளி

நாம் ..
வெளியில் தெரிய
உடலுக்கு மட்டும் ‘இஹ்ராம்’ தரிக்கிறோம்.
இறையருட் கவிமணி அவர்களோ – தம்
உள்ளத்திற்கே ‘இஹ்ராம்’ தரித்த
மெழுகுவர்த்தி !

தன்னல மறுத்துத்
தன்னையே கரைத்து
ஒளியினைக் கொடுத்தே
உருகிப் போனவர் !

நாக்குத் திரியில் மறைச்சுட ரேந்தி
தீனெறி காட்டிய தியாக விளக்கு !

வளர்ச்சி என்பதன் வாய்மைத் தத்துவ
மலர்ச்சி இந்த மெழுகு வர்த்தியில்..
‘நெடிலாய்ப் பிறந்து குறிலாய் வளரும்’
வடிவ முரணில் வழிவது ஞானம் !

உயர்ந்த மலையின் உச்சிப் பனியாய்
அமர்ந்த பதவியை அர்ப்பணித்து விட்டுப்
பள்ளம் நோக்கிப் பாய்ந்த வெள்ளம்
இறயருட் கவிமணி அவர்களின் உள்ளம் !

அதனாலேதான் ..
கல்லூரி முதல்வர் பதவியைத் துறந்து
அரும்பு நிலாக்களை அரவணைப்பதற்கென்றே
பிறைப்பள்ளியின் முதல்வர் பொறுப்பை
நிறைவுடன் ஏற்று நடத்திக் காட்டினார் !

இதனை..
‘பதவி இறக்கம்’ என்றே
விதண்டாவாதிகள் விவரித்தார்கள் !

நாற்றங் காலாய், நம்குல மணிகளை
நெஞ்சில் வாங்கி வளர்த்த கவிமணி ..
இறங்கி நீரைப் பாய்ச்சி நிமிர்த்ததில்
பிறங்கும் ‘ஏற்றப்’ பொலிவினை எய்தினர் !

அவர்கள்,
உள்ளும் புறமும் தூய வெள்ளையாய்
அல்லும் பகலும் ஆற்றிய அறத்தால் –
தன்னையே இறைவனில் தாரை வார்த்தனர் !

இறைவனில் தன்னை அர்ப்பணித் தார்க்கு
மறைவு உண்டு; மரணம் இல்லை !!

மண்ணில் விழுந்த மழைத்துளி வற்றிக்
கண்ணை விட்டே காட்சி மறையும் !

கடலில் விழுந்த மழைத்துளிக் கூட
காணா மல்தான் போய்விடு கின்றது !
ஆனால் அதுவோ ..
வற்றாக் கடலாய் வடிவெடுக் கின்றது !

இறையருட் கவிமணி அவர்கள் – ஒரு கடல் !!
இறையோ டிணைந்தோர் – (தம்)
இறப்புக்குப் பின்னும்
சிறப்புச் செய்யப்பட்டே வாழ்கிறார் !

கோணல் மாணல் இன்றி நேராய்
வானை நோக்கி வளர்ந்த நெடுமரம்,
வேர்தறித்து வீழ்த்தப் பட்ட பின்னரும் கூட
நிலைக்கு வந்து நிற்பதைப் பார்க்கிறோம்;..
கொடிக் கம்பமாய் !!

மரணம் என்பது –
நேராய் வளர்ந்த மரத்துக்குக் கூட
நிலையான வீழ்ச்சியை நல்குவ தில்லை !
நேர்வழி நடந்த இறை நேயரையா
கோர மரணம் கொன்றொழித்து விடும்?

நேர்மைக்கு வீழ்ச்சி நிரந்தர மில்லை;
தீமைக்கு வாழ்வு நிலைப்பது மில்லை..

- கஃபூர் தாசன்

வாழும் வானவில்


கவிஞர் ஈரோடு தமிழன்பன்

அடங்கக் கற்ற மலையாய்
அமைதி காத்த கடலாய்
ஒடுங்கி நின்ற விசும்பாய் – நான்
உத்தமர் கபூரைக் கண்டேன்.

அதட்டத் தெரியாத் தென்றல்
அவரின் மெல்லிய பண்பு !
கொதிக்கத் தெரியா நிலவு – அவரின்
குளிர்ச்சி ததும்பும் நடத்தை !

உலர்ந்து போகாப் பனியாய்
உள்ளம் அன்பு பொழியும் !
மலர்ந்து வாடா முறுவல் – அவர்
வ்ட்ட முகத்தில் வாழும் !

புனையும் குழந்தைப் பாட்டில்
பொன்னால் தொட்டில் கட்டிக்
கனிகள் கொய்து தருவார் – அவரே
சுளையாய் கனிந்து வருவார் !

ஓடையும் நதியாய் மாறும்
ஒழுங்கில் வெள்ளம் பாயும் !
மேடையில் தேனின் அருவி – அந்த
மேதையின் பொழிவில் வழியும்

தபலா அதிர்வு போலத்
தாளம் பிசகாச் சுதியில்
சபையில் ஒலிக்கும் பேச்சில் – கபூர்
சந்தனம் கமழச் செய்வார் !

வாழும் வான வில்லாய்
வாழ்வார் தமிழர் நெஞ்சில்
ஏழு வண்ண எண்ணம் – கபூர்
ஏந்தல் ஏந்தி வாழும்.