Friday, January 30, 2009

எண்ணமே வாழ்வு

கவிமணி அவர்களின் 'அரும்பூ' நூலில்

"அழியா தென்றும் வண்மை
அயரா தென்றும் திண்மை
எழிலைச் சேர்ப்பது பெண்மை
என்றும் சொல்நீ உண்மை"

"வில்லிற்குரியது அம்பு
வீணாம் ஆசை அம்பு
இல்லிற்குரியது செம்பு
எண்ணம் வாழ்வென நம்பு"

'அயராதென்றும் திண்மை' சந்தக் கவியில் 'எண்ணம் வாழ்வென நம்பு' எனும் தொடர்கள்

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"

என்ற குறளுக்குக் குரல் கொடுப்பவையாக உள்ளன.

- பேராசிரியர், ஏரல் ஜே.அஷ்ரப் அலி
பொருளியல் துறை, வக்பு வாரியக் கல்லூரி, மதுரை

பூவின்மேல் கல்

நாயகத்தின் பொறுமை யுள்ளத்திற்கும், கருணை யுணர்வுக்கும் எடுத்துக் காட்டாய்த் திகழ்கிறது - தாயிப் நகரத்தில் நடந்த நிகழ்ச்சி !

தாயிப் நகர மக்களிடம் ஓரிறைக் கொள்கையை நபிகள் நாயகம் உணர்த்த முயன்றபோது அங்கிருந்த செல்வாக்கு மிக்க மனிதர்கள் நபிகள் நாயகத்தைப் பார்த்துக் கேலியும் கிண்டலுமாகப் பின்வரும் மொழிகளை மொழிந்தார்கள்:

"நீர் இறைவனின் தூதரென்றால்உம்முன் நிற்கும் தகுதி எமக்கில்லைநீர் இறைவனின் தூதர் இல்லையென்றால்எம்முன் நிற்கும் தகுதி உமக்கில்லை"

குத்தீட்டிச் சொற்களால் நாயக உள்ளத்தைக் குத்தில் காயப்படுத்தியும் திருப்தியடையாத அக்கொடியவர்கள் கண்ஜாடை காட்டி நாயகத் திருமேனி மீது கல்லெறிய தாயிப் நகர மக்களுக்குக் கட்டளை யிட்டார்கள்.

கல்லடிபட்டுப் பூவினும் மெல்லிய நாயகத் திருமேனி புண்பட்டுப் பூமியில் இரத்தம் கசிந்து நின்ற அக்காட்சியை இதயம் பதற "இசைமுரசு" நாகூர் ஈ.எம்.ஹனிபா "தாயிப் நகரத்து வீதியிலே..." எனச் சோகக் குரலெடுத்துப் பாடியுள்ள உருக்கமான பாட்டைக் கேட்டு உள்ளம் கசியாதவர்கள் நம்மில் யார் இருக்க முடியும்?

கவிஞர் மு.மேத்தா மனம் பதைபதைக்கத் தாயிப் நகரக் கொடுமையை இப்படிக் குறிப்பிடுகிறார் :

"தாயிப் நகரத்தின் வீதிகளில் - ஒரு
தங்க நிலவைத் துரத்துகிறார்
அருமை நபியை ஆருயிரை
அணையா விளக்கை வருத்துகிறார்"

'கவிக்கோ' அப்துர் ரகுமான் தன் கவிமொழியில் சற்று வித்தியாசமாக இதைச் சித்தரித்துக் காட்டினார் :

"கல்லின் மீது
பூவை எறிபவர்கள்
இப்போது
பூவின் மீது
கல்லை எறிகிறார்கள்"

இத்தகைய மோசமான சூழலிலும் தாயிப் நகர மக்களிடம் கருணை யுள்ளத்துடன் நபிகள் நாயகம் நடந்துக் கொண்ட காட்சியை,

"சொன்மாரி பொழிந்ததற்காய்க்
கன்மாரி பெய்துவிட்ட
வன்மனத்தார் திருந்துதற்கு
வழிவகுத்த நாயகமே"

எனச் சித்தரித்துக் காடுகிறார், இறையருட் கவிமணி.

- பேராசிரியர், முனைவர் ஹ.மு.நத்தர்சா,
தமிழ்த்துறை, புதுக் கல்லூரி, சென்னை - 14

கேக்



ஒரு சிறிய ஊரில் தேநீர்க்கடை இருந்தது. அக்கடையிலிருந்து காகம் ஒன்று "கேக்"கை எடுத்தது. பக்கத்தில் இருந்த மரத்தின் மீது உட்கார்ந்தது. மரத்தின் அடியில் இருந்த ஒரு கொக்கு காகத்திடம் கேக்கைக் கேட்டது. காகம் "இல்லை" என்று கூறுவதற்கு வாயைத் திறந்தது. கேக் கீழே விழுந்தது. கொக்கு அதனை எடுத்துக்கொண்டு காகத்தைப் பார்த்து கேலி செய்தது.
குழந்தைகளுக்கு கிளுகிளுப்பூட்டும் இக்கற்பனைக் கதையை நாலே வரிகளில் நறுக்குத் தெறித்தாற்போல் நற்றமிழ் சுவை மணக்க நயம்பட இறையருட் கவிமணி அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் :
காக்கை கேக்கைக் கோக்க
கொக்கு கேக்கைக் கேக்க
காக்கை கேக் கைக் கக்க
கொக்கு கெக்கெக் கெக்கே !
('அரும் பூ' நூலிலிருந்து)

உயர்ந்தோர் தாழ்ந்தோர்



"உன்னை விடவும் பொருள் நிலையில்
உயர்ந்தோர் தம்மைக் கண்டுவிடின்
உன்னை விடவும் தாழ்ந்தோரை
உன்னுக என்பது நபிமொழியாம்"

-இறையருட் கவிமணி

கிரிதாரி பிரசாத்

"அமெரிக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேராசிரியர் அவர்கள் தன்னுடைய ஆழமான கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்."

- ஆன்மீகச் சொற்பொழிவாளர் திரு. கிரிதாரி பிரசாத்
(1951-ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை பிரோவா தியேட்டரில் நிகழ்த்திய பேருரையிலிருந்து)

முல்லை சக்தி

"இன்சொல் வல்லார்; தெவிட்டாத சொற்பெருக்காற்றும் ஆற்றாளர்; பேரறிஞர் அண்ணா அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டுள்ள பண்பாளர் - ஜனாப் அப்துல் கபூர் அவர்கள்"

- முல்லை சக்தி
(வட ஆற்காடு மாவட்ட திராவிட இயக்க முன்னோடியாய்த் திகழ்ந்த பிரமுகர்.)

காண்டாவும் போண்டாவும்



திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலைக்கு சுற்றத்தாருடன் சென்றபோது தன் அருமை மகள் பானு காண்டா மிருகத்தைக் காண நேர்ந்தது. கையிலிருந்த போண்டாவை அதன் வாயில் வீசி எறிய அக்காட்சியைக் கண்ட கவிஞருக்கு பாடலொன்று பிறக்கிறது.

காண்டா ஒன்றைக் கண்டவுடன்
.....கருத்துடனே பானுவும்
போண்டா ஒன்றைப் போட்டனள்
.....பொங்கிப் பொங்கிச் சிரித்தனள் .

இப்பாடல் 'அரும்பூ' வில் இடம் பெற்றது.

தகவல் : திருவை அப்துர் ரஹ்மான்

தமிழ்ப் புலமை



இறையருட் கவிமணி அவர்கள் சென்னை, வாணியம்பாடி, திருச்சி, உத்தமபாளையம், அதிராம்பட்டினம் முதலான ஊர்களில் தமிழ்த்தொண்டாற்றிய பேராசிரியர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். 1973-ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடந்த மீலாது விழா கவியரங்கத்தை தலைமையேற்று நடத்தியபோது, இச்செய்திகள் அனைத்தையும் ஒரே வரியில் அடக்கிய அவரது தனித்திறன் நிறைந்த தமிழ்ப் புலமையைப் பாருங்கள்.

"பாடியதில் நடுநகரில் பாளையத்தில் பட்டினத்தில்
பாடிவிட்டுப் பட்டிருக்கும் பறவையெனை அழைத்துவந்தே
பாட்டரங்கில் மாட்டிவிட்டீர்
பாப்புனையத் தூண்டிவிட்டீர்"

பாடி = வாணியம்பாடி - இசுலாமியக் கல்லூரி
நடுநகர் = திருச்சி - ஜமால் முகம்மது கல்லூரி
பாளையம் - உத்தமபாளையம் - ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி
பட்டினம் = அதிராம்பட்டினம் - காதிர் முகைதீன் கல்லூரி

பூச்செண்டு

தமிழின் இலக்கியம் பூச்செண்டு
தனியாய் அதற்கொரு மணமுண்டு
தமிழின் தீந்தேன் விருந்துண்டு
தழைக்கும் நாமோ மலர்வண்டு !

சமண பெளத்த வைணவமும்
சைவ இஸ்லாம் கிறிஸ்துவமும்
கமழும் நூல்கள் இந்நாட்டின்
கவினார் பண்பின் களஞ்சியமாம்

- இறையருட் கவிமணி கா.அப்துல் கபூர்
(அரும் பூ நூலிலிருந்து)

ஏ.வி.எம். நஸீமுத்தீன்

தூமணிப் பாவலன், திருவிதாங் கோட்டு
மாமகன், தமிழ்ச்சுவை மாந்திட வைத்தவன் !
நாமகன் பன்மொழி நாவில் வளைத்தவன் !
கோமகன் அப்துல் கபூர்உயிர் நீத்தனன் !

பாவளம் செழித்த 'பதினென் மாலை'கள்
ஆவணம் என்றே அளித்த பாவலன் !
பூமணங் கமழும் 'அரும்பூ' தொடுத்தவன் !
நாமணங் கொண்ட நற்றமிழ் வித்தகன் !

'மனைவிளக்' கொளியில் 'மனவிளக்' கேற்றினான் !
தனிமொழித் திறத்தால் 'இறைமொழி' பாடினான் !
நினைவெலாம் இனித்திட 'நபிமொழி' நல்கினான் !
மனம்மொழி மெய்யெலாம் மதுரமே தூவினான் !

பல்லுயர் சிறப்பெலாம் படைத்த வல்லுநன்
கல்வியின் பணியிலே கரைந்த விற்பனன் !
மெல்லிசை பாடல்கள் வடித்த அற்புதன் !
பல்பொருள் விரித்த 'மதிநா' நாயகன் !

நேயனாம் அருட்கவி அப்துல் கபூரெனும்
தூயவன் வாழ்க்கை தமிழின் சாசனம் !
போயவன் படைப்பெலாம் பரவச் செய்திட
யாமிவண் ஆற்றுவம்.. கவிமணி வாழ்ந்திட !

அரும்பூ வந்தது

குழந்தை இலக்கியம் படைப்பது எல்லோராலும் இயலாத காரியம். குழந்தைகளோடு பழகி அவர்கள் மனதை நன்கு புரிந்துக் கொண்ட ஒருவரால்தான் அது இயலும் கவிமணி (1876), மகாகவி பாரதி (1882), பாவேந்தர் பாரதிதாசன், அழ.வள்ளியப்பா இவர்களின் வரிசையில் இறையருட் கவிமணி அவர்கள் நீங்காத இடத்தைப் பெற்று விட்டனர். 1989-ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்த "அரும்பூ" ஒரு சரித்திரம் படைத்தது. இப்படைப்பை பாராட்டுகிறார் ஒரு கவிஞர்,

கரும்புக் காட்டை கவியாக்கிக்
.....காதிற் குள்ளே ஊற்றியவர்
சுருங்கிப் போன மானிடரைச்
.....சொற்பொழி வாலே நிமிர்த்தியவர்
விருந்து படைத்து வெகுநாட்கள்
.....விலகிச் சென்றன எனும்போதில்
அரும்பூ மலரைக் கண்டேனே
.....அதிக இன்பம் கொண்டேனே

படிக்க எடுத்தேன் வெடுக்கென்று
.....பற்றிக் கொண்டார் வீட்டினுள்ளோர்
முடித்தார் ஒருவர் பின்னாக
.....முடிக்கப் பொறுக்க மாட்டாமல்
படிக்க முனைந்தார் அனைவருமே
.....பழுத்த குலையில் ஈக்கள்போல்
தொடுத்த அரும்பூ அத்தனையும்
.....சுவைத்'தேன்' சுவைத்'தேன்' என்றாரே

படிக்கட் டாகும் அறிவுரையா
.....பழக்குலை தோற்கும் கனிவுரையா
வெடிக்கும் புதிரா விளையாட்டா
.....விழுந்து விழுந்து சிரிக்கட்டா
தொடுக்கும் கணக்கா ரயில்வண்டித்
.....தொடரில் உலகைச் சுற்றுவதா
நொடிக்குள் எல்லாம் இயலுவதே
.....நுழைந்தால் போதும் அரும்பூவில்

- தமிழ்மாமணி, புலவர் அ.அஹ்மது பஷீர் M.A.,M.Ed.,