Wednesday, January 7, 2009

நபிமொழி நானூறு

ஒரு கையில் இறைவேதம்
மறு கையில் நபிபோதம்
இருக்கையில் நமகென்ன தயக்கம்?
கண்களில் ஏனிந்த கலக்கம்?

என்று பாடுவார் இசைமுரசு நாகூர் E.M.ஹனீபா அவர்கள். 'குர்ஆன்' எனப்படும் இறை வேதமும், 'ஹதீஸ்' எனப்படும் நபிகள் நாயகம் நவின்ற நன்மொழிகளூம் முஸ்லீம்களுக்கு இரு கண்கள் போன்றது.

நபிகள் நாயகம் அவர்களின் பொன்மொழிகளை அதன் அர்த்தங்கள் சிறிதளவும் மாறாத வகையில் செந்தமிழில் கவிதை வடிவில் "நபிமொழி நானூறு" என்ற நூல் மூலம் நமக்கு அளித்துச் சென்றவர் இறயருட் கவிமணி அவர்கள்.

அரபி, தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் அன்னார் புலமை பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாயகம் நவின்ற "ஹதீஸ்" பொன்மொழியை எதுகை மோனை சுவைபட இயற்றமிழில் அவர்கள் கையாண்டிருக்கும் முறையை பாருங்கள் :

"கையால் தடுப்பீர் தவறுகளை;
கையா லின்றேல் நாவதனால்;
உய்யா நின்றால் உள்ளத்தால்
ஒறுப்பீர் என்பது நபிமொழியாம்"

அப்துல் கையூம்

1 comment:

  1. நபிமொழி நானூறு என்னும் நூலை பல ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். பாதுகாத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொரு நபி மொழியையும் மிகவும் கவனத்துடன் பேராசிரியர் கவிதையாக்கியிருப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்.
    அரபிக் கல்லூரியில் பயின்று அரபியில் நபிமொழியைப் பயின்றவர்கள் பேராசிரியரின் நபிமொழி நானூறு கவிதை நூலை வாசித்தால் வியந்து போவார்கள். அந்த வகையில் அரபி மூலத்துடன் ஒப்பிட்டுப்பர்த்து வியந்தேன். மாஷா அல்லாஹ் அற்புதமான கவிதையாக்கம்.
    உதாரணத்திற்கு இரு நபி மொழிகள்
    ' இரு தாடைகளுக்கு இடையில் உள்ளதற்கும் இரு கால்களுக்கிடையில் உள்ளதற்கும் எவர் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்காக சுவாக்கத்திற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என்பது நபி மொழி. பேராசிரியரின் அற்புதமான மொழி பெயர்ப்பைப் பாருங்கள்

    ஈரலகிடையே இருப்பதையும்
    இருகாலிடையே இருப்பதையும்
    பேரழகுடனே காப்போர்ககு
    பேணும் சொர்க்கம் நபி மொழியாம்

    'இறைவனை நினைத்து அழுத கண்களையும் இஸ்லாத்தைக் காப்பதற்காக விழித்திருந்த கண்களையும் நரக நெருப்பு தீண்டாது' என்பது நபி மொழி. பேராசிரியரின் மொழி நடையைப் பாருங்கள்.

    இறையினை அஞ்சி அழுத விழி
    இஸ்லாம் காக்க விழித்த விழி
    இரு வழி மீதும் நரகத் தீ
    இருக்காதென்பது நபிமொழியாம்.

    ReplyDelete